Ads Area

டாக்டர். எஸ் கிருஷ்ணகுமாரது மரணம் முஸ்லிம் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது-மருதமுனை முஸ்லிம் சமூகம் இரங்கல்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் சீனித்தம்பி கிருஷ்ணகுமார் அவர்கள் திடீர் சுகயீனம் உற்று இன்று (01.11.2020) அதிகாலை காலமானார். அன்னாரது திடீர் மரணம் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மருதமுனை வாழ் மக்கள் இவரது இழப்பால் சோகம் அடைந்துள்ளனர்.

1960ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் சீனித்தம்பி கிருஷ்ணகுமார் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவரது மகன் ஒருவர் தற்போது மருத்துவபீட மாணவராக உள்ளார்.

மருதமுனை - பாண்டிருப்பு எல்லை கிராமத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் எஸ். கிருஷ்ணகுமார் மிகவும் பின்தங்கிய சூழலிலிருந்து கல்வி கற்று வைத்தியத் துறையில் சிறப்பாக சேவையாற்றிய ஒருவர். தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகவும் அந்நியோன்யமாகவும் சமாதானமாகவும் செயற்பட்டவர். மருதமுனை மக்கள் தமது மருத்துவ சேவையை பெற்றுக் கொள்வதற்காக கூடுதலாக இவரை நாடி செல்வது வழக்கமாகும். சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரிடமும் மிகவும் கனிவுடனும் பக்குவத்துடன் பழகி ஏழை எளியவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி வைத்திய சேவையை சிறப்பாக செய்து வந்தார்.

சிறிது காலத்திற்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கி சுகயீனமாக இருந்தபொழுது பலரும் இவருக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டதோடு இவரைத் தேடிச்சென்று சுகம் விசாரித்தார்கள். தமிழ் -முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு நல்லிணக்க உதாரண புருஷராக சேவையாற்றிய வைத்திய அதிகாரி கிருஷ்ணகுமார் அவர்களுடைய திடீர் மரணம் தாங்க முடியாத ஒன்றாகும்.

மருதமுனையில் இருக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கு தன்னால் முடியுமான பங்களிப்புகளை செய்து வந்த ஒருவர். இன முரண்பாடுகள் தோன்றிய பல்வேறு காலகட்டங்களிலும் நல்லிணக்கத்திற்காக முன்னின்று செயற்பட்ட ஒருவர்.

முஸ்லிம் சமூகம் சார்பாகவும் மருதமுனை மக்கள் சார்பாகவும் அன்னாரது குடும்பத்தினருக்கும் இவருடைய இறப்பில் துயருற்றிருக்கும் தமிழ் -முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். இரங்கள் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளதுடன். முஸ்லிம் சமூகம் சார்பாக மருதமுனையில் உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் அவரோடு நெருங்கிப் பழகிய முஸ்லிம் மக்கள் அமரர் டாக்டர்.கிருஷ்ணகுமார் அவர்களுடைய இல்லத்துக்குச் சென்று இரங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe