உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸும் இருந்து வருகிறது. இங்கு ஏற்படும் நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, மழை வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே அங்கு கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக அங்கு புயல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் பிலிப்பைன்ஸ் கடலோரப் பகுதியில் உருவான வான்கோ புயல் தற்போது பிலிப்பைன்ஸின் வடக்கு கடலோரப் பகுதியை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 ஆம் வகை சூப்பர் புயலாக அறியப்படும் வாம்கோ புயல், பிலிபைன்ஸின் தலைநகர் மலினா வடக்கு லூசான் தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தாக்கியது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 105 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதோடு கனமழை வெள்ளத்தையும் ஏற்படுத்தியது.
இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் மனிலாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தென்கிழக்கு ஆசியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிலிப்பைனஸில் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 21 புயல்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.