இடுவம்புக்கு ஏது மருந்து?
மெல்லமாய் துளிர்விட்ட நம்பிக்கை கீற்றுகள் அறுந்து போயிருக்கின்றன. இனியும் அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கும் என்பது குதிரைக்கொம்பாகி வருகிறது.
மருத்துவ பேராசிரியர், அறுவைச் சிகிச்சை பேராசியர், மனித உடற்கூற்று பேராசிரியர், நுண்ணுயிரியல் பேராசிரியர், மனித தடயவியல் பேராசிரியர் என துறை சார் வல்லுனர்களின் ஏகோபித்த பரிந்துரைகள் கூட கணக்கில் எடுக்கப்படாமல் தொடர்ந்தும் மறுதலிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிபுணர்கள் என்ற பெயரில் அபுணர்களே விளக்கம் உடையவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். விஞ்ஞானம் என்பதை விட இனவாத அஞ்சானமே இங்கே கோலோச்சி நிற்கிறது.
இனி இருக்கும் ஒரே நம்பிக்கை நீதித் துறையில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமே. இப்போது நடந்து வருகின்ற விடயங்களை பார்க்கின்ற போது அதுவும் கானல் நீராகி விடுமோ என்ற கவலை தான் மேலெழுந்து வருகிறது.
அது வரை நாம் என்ன செய்வது? இப்படியே எரிப்பதை பொறுத்து கொள்வதா? சிவில் சமூகமாய் நமது எதிர்ப்பை தெரிவிக்க வேறு ஏதும் வழிமுறைகள் இருக்கின்றனவா?
இது தான் நாம் சிந்திக்க வேண்டிய தருணம்.
இறந்த உடல்களை குளிப்பாட்டி, கபன் செய்து, தொழுவித்து அடக்கம் செய்வது தானே தமது கடமை, எரிப்பது ஒன்றும் நமது கடமை அல்லவே. கடமையல்லாத ஒன்றை ஏன் வலிந்து நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
ஆகவே, கோரோனாவில் இறந்த உடல்களை எரிப்பதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் ஒவ்வொருவரும் எழுதிக் கொடுக்க வேண்டும். இதை நமது மரண சாசனமாக எழுதி வைத்தாலும் பரவாயில்லை. யாராவது நமது அன்புக்குரியவர்கள் கொரோனாவால் இறந்தால் எரிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறோம் என்பதற்கு சைன் பண்ண முடியாது என்று அடியோடு மறுத்துவிட வேண்டும். அதிலேயே உறுதியாக இருக்க வேண்டும்.
அது போல எரிப்பதற்கு ஏன் நாங்கள் சவப் பெட்டிகளை வாங்கி கொடுக்க வேண்டும்? எரிப்பதற்கான செலவை ஏன் நாங்கள் பொறுப்பு எடுக்க வேண்டும்?
எரிப்பதற்ககு உண்டான செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். பொட்டி வாங்குவதையும் அவர்களே செய்யட்டும். எரிக்கின்ற இடத்தில் நமக்கு என்ன வேலை.?
எரித்த சாம்பலை அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளட்டும். அதை கேட்பது கூட நமக்கு தேவை இல்லாத விஷயம்.
அது போல எரிக்கப்படும் ஒவ்வொரு ஜனாஸாவையும் நாம் சுஹதாக்களின் நிலையில் வைத்து கொண்டாட வேண்டும் அந்த அந்தஸ்தை அவர்கள் அடைவதற்கு பிரார்த்திக்க வேன்டும். இதை நாம் எல்லோரும் சேர்ந்து முக நூல் போன்ற பொது வெளியில் செய்ய வேண்டும்.
அப்போது தான் ஒவ்வொரு ஜனாஸா எரிப்பும் நமது அனுமதி இல்லாமலே நடைபெறுகிறது என்பது பதிவு செய்யப்படும்.அப்படி எரிந்தவர்கள் உயர்ந்த அந்தஸ்தை அடைந்தவர்கள் என்ற செய்தியை நாம் பதிவு செய்ய முடியும். இது ஒன்றே எரிந்தவர்களுடைய உறவுகளுக்கும் கொஞ்சம் மன ஆறுதல் அடைவதற்கு வழி வகுக்கும்.
இது ஒரு கஷ்டமான தீர்மானம் தான். தாங்கிக் கொள்ள முடியாத ஒரு முடிவு தான். ஆனாலும் இப்போதைய நிலையில் இது மட்டுமே நம் முன்னால் உள்ள தெரிவு. நமது எதிர்ப்பை பதிவு செய்வதற்கான சாத்தியமான வழி. அவர்கள் எரிப்பதிலே உறுதியாக இருக்கும் போது நாங்களும் புதைப்பதிலே உறுதியாக இருப்பதற்கு இதுவே சிறந்த வழி.
PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்