Ads Area

குவைத்தில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பெண்களின் அவலக் குரல் - உதவுமாறு மன்றாட்டம்.

குவைத் நாட்டில் கடந்த 7 மாதங்களாக நிர்க்கதியாகியுள்ள எங்களை மீட்டெடுத்து துயர் துடையுங்கள் என இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பணிப்பெண்கள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குவைத்தில் சிக்கியுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் தமது அவலக் குரலுடன் காணொளியொன்றையும் வெளியிட்டு அதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தம்மை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்தக் காணொளியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.

அதில் அவர்கள் தெரிவிப்பதாவது,

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே தொடர்பாடல் எதுவுமே இல்லாமல் இங்குள்ளோம். தொடர்பு கொள்ளக் கூடிய கையடக்கத்தொலைபேசிகள் எதுவுமே நாம் பாவிக்க முடியாது மறுக்கப்பட்டுள்ளோம்.

அவ்வேளையிலும் இந்த வீடியோ பதிவை கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் இந்திய பணிப்பெண் ஒருவரின் மனிதாபிமானத்தினால் இரகசியமாகப் பதிவு செய்து வழங்குகின்றோம்.

நாங்கள் குவைத் நாட்டில் கடந்த 7 மாதங்களாக அரச பாதுகாப்பு வளாகமொன்றில் அடைத்து வைக்கப்பட்டு தங்க வைக்கப்படுள்ளோம்.

எங்களுக்கு எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் என்பது சரியாகத் தெரியாது. ஆனால் இது குவைத் நாட்டில் என்று தெரிகிறது.

இங்கே நாமிருக்கும் இந்த தடுப்பு வளாகத்தில் சுமார் 70 பணிப்பெண்கள் இருக்கிறோம். இது போன்று இன்னும் பல இடங்களில் பலர் இருக்கலாம் என்று நம்புகின்றோம். ஏன் எங்களை தடுத்து வைத்திருக்கிறார்கள் என்றும் எங்களுக்குத் தெரியாது.

அதேவேளை எங்களைப் போன்று தங்க வைக்கப்பட்டிருந்த, குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்த, தமது நாட்டுப் பெண்களை அந்தந்த நாடுகள் திருப்பி அழைத்துக் கொண்டன. இலங்கை நாடு மட்டும் எம்மை கை விட்டு விட்டது.

இங்குள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் அவ்வப்போது வந்து எம்மைப் பார்த்து விட்டு அடுத்த வாரம் இலங்கை போகலாம் என்று  கடந்த ஏழு மாதங்களாகச் சொல்லிக் கொண்டு எங்களை ஏமாற்றி வருகின்றார்கள்.

ஜனாதிபதி அவர்களே எங்களது துயரங்களை ஏறெடுத்துப் பாருங்கள் எமது தாய், தந்தையர், சகோதரங்கள், பிள்ளைகள் அவர்களது நிலைமை, அவர்களுக்க நடந்தது என்ன என்பது கூட எமக்குத் தெரியாது. ஏனென்றால் எங்களுக்குத் தொடர்பு கொள்ளும் எல்லா வழிகளும் மறுக்கப்பட்டு விட்டன.

சம்பளம் இல்லை. சவர்க்காரம் வாங்கக் கூட வழியில்லை. கையில் பணம் இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்றபடியால்தான் இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்தோம்.

நாங்கள் அனைவரும் பெண்கள். இங்கே சுகாதார வசதிகளும் பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். மாற்றிக்கொள்ள ஆடைகள் கூட இல்லாது அவஸ்தைப் படுகின்றோம்

நோயுள்ள பெண்கள் இங்கே கடும் துயரத்தோடு காலங் கழிக்கிறார்கள். சிலர் எழுந்திருக்க முடியாத நிலையில் உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

நாங்கள் நோய்வாய்ப்பட்டு மரணித்துப் போவதற்கிடையில் எங்களை இந்த துயரமான நிலைமையிலிருந்து மீட்டெடுங்கள்” என்று பணிப்பெண்கள் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காணொளியில் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடமும் அங்குள்ள பெண்கள் துயரமான நிலைமையில் இருப்பதும் காட்டப்படுகிறது.

Thanks - Jaffnamuslims



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe