கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை கட்டாய தகனத்துக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்போரை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் இலங்கையை வலியுறுத்தியுள்ளதுடன் இது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளனர்.
உடல்களை தகனம் செய்வதுதான் ஒரே வழி எனக் குறிப்பிடுவதானது மனித உரிமை மீறலுக்குச் சமம் என நிபுணர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அல்லது வேறு நாடுகளில் இறந்த உடல்களை அடக்கம் செய்வது கொவிட் 19 தொற்றுப் பரவும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது என்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ அல்லது அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என நிபுணர்கள் தெரிவித்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Siva Ramasamy