Ads Area

முகமது நபி பற்றி சர்ச்சை பேச்சு - இயக்குநர் அமீர் தமிழக அரசுக்கு வைத்த வேண்டுகோள்.

மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதைக் கண்டித்தும் கல்யாண ராமனை கைது செய்யக் கோரியும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் பலரும் இச்சம்பவத்தை கண்டித்தனர்.

இதையடுத்து பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது மதங்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதல் ஏற்படுத்த முயற்சித்தல், தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் இயக்குநர் அமீர், “தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகம்மது நபியை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இது போல் ஒரு நச்சுக் கருத்தை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கல்யாணராமன் மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகிய இருவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மத்திய மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைக்கிறேன்” இவ்வாறு இயக்குநர் அமீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe