ஐ.எல்.எம். நாஸிம்
தேசிய காங்கிரசின் தலைவரையோ அல்லது அவரின் செயற்பாடுகளையோ விமர்சிக்க காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறிலுக்கு எவ்வித தராதரமும் தகுதியும் இல்லை. முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மணினால் தான் தேசிய காங்கிரஸ் தலைவர் வென்றதாக அடிக்கடி கருத்து கூறி வரும் கி. ஜெயசிறில் அரசியலின் ஆரம்ப நிலை கூட தெரியாத சிறுபிள்ளை அரசியல்வாதி என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும், மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்தார்.
இன்று காலை மாளிகைக்காட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
முழுபோதையில் கருத்து தெரிவிப்பவர் போல கி. ஜெயசிறில் அடிக்கடி தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை பற்றி குதர்க்கமான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் தான் பிரபல்யம் அடையலாம் அல்லது தான் அரசியல் ஞானி என வெளிக்காட்டலாம் என நினைக்கிறார். அது அவரின் முட்டாள் தனத்தின் உச்சமே. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமக்கான மாற்று தெரிவை தெரிந்ததன் விளைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சி அம்பாறையில் தெரிந்தது. அதனால் தான் அதாஉல்லா வென்றார் என்றால் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக எண்ணுவது போன்றே அவருடைய நிறைய செயற்பாடுகள் அமைந்துள்ளது.
காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்தியையும், இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களையும் தமிழர், முஸ்லிம் எனும் இனவாத கதையாடல்களை கொண்டு தடுத்துவிட முடியும் என நம்பும் அவரின் நம்பிக்கை எப்போதும் ஈடேறாது. தெளிந்த சிந்தனையில் உள்ள மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி மக்கள் இவரையும் இவரின் மீன் மூளை சிந்தனைகளையும் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள்.
பிரதேச சபை அமர்வுகளில் இதுவரை நடந்த தில்லுமுல்லுகளையும் விவாதங்களையும் நடுநிலையுடன் வெளியே மக்களின் கவனத்திற்கு கொண்டுவராமல் ஊடகவியலாளர்கள் அவரின் மான்பை காக்கும் விதமாக செயற்பட்டதாக நேற்றுமுன்தினம் பகிரங்கமாக போட்டியளித்துள்ள அவர் அந்த ஊடகவியலாளர்களின் முகத்திரையையும் கிழித்தெறிந்துள்ளார். இப்படியான ஊடகவியலாளர்களினால் ஊடக துறைக்கே பெரும் அவமானம். சபை அமர்வுகளில் நடக்கும் விடயங்களை துல்லியமாக மக்களின் பார்வைக்கு கொண்டுசேர்க்க தவறிய அந்த ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை மீறியவர்களே.
தவிசாளர் பதவியின் அதிகாரங்கள் தெரியாமல் தசாப்த அனுபவம் கொண்ட அக்கரைப்பற்று தவிசாளருக்கு பாடம் எடுக்க எத்தனிக்கும் கி. ஜெயசிறில் பிரதேச சபை சட்டதிட்டங்ககளையும், அதிகாரங்களையும் அறிந்துவைத்திருப்பது அவரின் கௌரவத்திற்கு நன்மை சேர்க்கும் என்றார்.