சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் நேற்றைய (2021/02/08) அமர்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினருமான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியைச் சேர்ந்த ஐ.எல்.எம் மாஹிர் அவர்களினால் ஜனாசா எரிப்புக்கு எதிரான தனிநபர் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மரணித்த ஒருவருக்கு செய்யும் இறுதி மரியாதைகளில் ஒன்றான அவர்களை அடக்கம் செய்யும் உரிமையை இந்த அரசாங்கம் கொரோனாவினைக் காரணம் காட்டி இல்லாமல் செய்துள்ளது வேதனையளிக்கிறது.
உலகில் உள்ள பெரும்பாலானா நாடுகள் கொரோனாவினால் மரணமானவர்களை அடக்கம் செய்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி வரும் இந் நிலையில் இலங்கையில் மாத்திரம் தான்தோன்றித்தனமாக, கட்டாயப்படுத்தி ஜனாசாக்கள் எரியூட்டப்பட்டு வருகின்றமை ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகம் என பிரேரணை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த தனி நபர் பிரேரணையானது சபையோரால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் போன்றோருக்கும் அனுப்பி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.