Ads Area

வீடுகளில் மாடு அறுப்பது தொடர்பில் முதல்வரின் அவசர அறிவித்தல்..! மீறினால் 02 இலட்சம் ரூபா அபராதம்..!

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் விலங்கறுமனை தவிர்ந்த இடங்களில் அனுமதியின்றி மாடுகள் அறுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ள மாநகர சபை, அவ்வாறு மாடறுப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபரிடம் 02 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணத்தடை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாட்டிறைச்சிக்கடைகளும் மூடி வைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் பொது மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்வதற்கு மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான மாடுகள் விலங்கறுமனைகளுக்கு கொண்டு வரப்பட்டு, அவை கால்நடை வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டு, சட்டப்பூர்வமானதும் அறுவைக்கு உகந்ததுமான மாடுகள்தான் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அங்கேயே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் முன்னிலையில் முறைப்படி அறுக்கப்படுகின்றன.

எனினும் நடமாடும் மாட்டிறைச்சி விற்பனைக்கான அனுமதியை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் விலங்கறுமனைகளில் அல்லாமல் வீடுகளிலும் வேறு சில இடங்களிலும் கள்ள மாடுகளை அறுத்து விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக திருடப்பட்ட மாடுகள், நோய்வாய்ப்பட்ட மாடுகள் மற்றும் அறுவைக்கு பொருத்தமில்லாத மாடுகள் அறுக்கப்பட்டு, மனித நுகர்வுக்கு உதவாத இறைச்சி விற்கப்படுவதாக எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறு அனுமதியின்றி மாடுகள் அறுப்பதும் அம்மாட்டிறைச்சியை விற்பதும் சட்டவிரோதமான செயற்பாடாகும். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகையினால், விலங்கறுமனை தவிர்ந்த இடங்களில் அனுமதியின்றி மாடறுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்களிடம் 02 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஊடகப் பிரிவு.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe