நுருல் ஹுதா உமர்
சம்மாந்துறை கமு/ சது/ ஜமாலியா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கலைக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் எம். ஐ. எம். றிஸ்விகான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நால்வர் இம்மனுவை தாக்கல் செய்து பிரதிவாதிகளாக இப்பாடசாலையின் அதிபர் எம். எம். மஹிஷா பானு, வலய கல்வி பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம், மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரை குறிப்பிட்டு உள்ளனர்.
இப்பாடசாலையில் கட்டிட நிர்மாணத்தில் பிரதிவாதிகளில் ஒருவரான அதிபரால் மேற்கொள்ளப்பட்ட 45 இலட்சம் ரூபாய் ஊழலை வெளிப்படுத்தி மனுதாரர்கள் நடவடிக்கை எடுத்து வருவதை தொடர்ந்தே பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவை கலைக்க பிரதிவாதிகள் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானம் எடுத்ததாக நீதிமன்றத்துக்கு முறையிடப்பட்டு உள்ளது.
இதை கலைப்பதற்கு பிரதிவாதிகள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் தீர்மானம் ஆகியவை சட்ட விரோதமானவை என்று பிரகடனப்படுத்தி கலைக்கப்பட்ட பாடசலை அபிவிருத்தி குழு தொடர்ந்து இயங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் முக்கியமாக கோரி உள்ளனர்.
சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் மேற்படி பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு கடந்த 02 ஆம் திகதி கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு புதிய குழு 04 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.