Ads Area

ஹக்கீமின் பின்னால் ஒழிந்துகொண்டு ஐ.ம.சக்தி அரசியல் செய்தால் நாங்கள் மாற்று முடிவை எடுப்போம் : தலைமைகளின் முன்னிலையில் ஆதரவாளர்கள் தெரிவிப்பு. .

 நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ். 

சமகால அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அம்பாறையில் ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்த முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு கல்முனை தனியார் மண்டபம் ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி எம். எஸ். அப்துல் றஸாக் தலைமையில் இன்று (15) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார, ஐ.ம.சக்தியின் தேசிய பிரதித்தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான புத்திக்க பத்திரன்ன, ஐ.ம.சக்தியின் தொழிற்சங்க தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபூர் ரஹ்மான், ஐ.ம.சக்தியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்ரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட அமைப்பாளருமான சந்திரபதி கலபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

கட்சி முக்கிய பிரமுகர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த கல்முனை பிரதேச ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டிணைந்து தேர்தல் கேட்பதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவப்படுத்தும் தொடர்ந்தும் இழந்து வருவதாகவும், ஐ.தே. கட்சியும் கடந்த காலங்களில் இந்த பிழைகளையே விட்டதாகவும் வலியுறுத்தினர். மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஐ.தே. கட்சியை அழித்தது போன்று இப்போது ஐ.ம. சக்தியையும் அழித்து கொண்டிருக்கிறார். அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு எமது சுயகௌரவத்தை இழந்து அவர்களின் பின்னால் ஒளிந்து கொண்டு வந்தால் நாங்கள் ஜே. வி.பியை ஆதரிக்க தயாராக உள்ளோம். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், எமது வாக்குகள் வீணாக மாற்று பங்காளி கட்சிகளுக்கு செல்வதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். எம். மன்சூர், கேட்டமுதலியார் எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அஹமட் காலத்திலிருந்து உத்வேகம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். எமது விருப்பு வாக்குகளை கொண்டு ஏனைய கட்சி உறுப்பினர்கள் எம்.பியாகும் நிலை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால் எமது ஆதரவாளர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். தொடர்ந்தும்  இந்த நிலை நீடித்தால் ஐக்கிய மக்கள் சக்தியும் அழிந்துவிடும். மக்கள் மயிலையும், மரத்தையும் நிராகரிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். 

கடந்த காலத்தில் விட்ட பிழைகளினாலையே இன்று ஐக்கிய மக்கள் சக்தி பல விழ்ச்சிகளை சந்தித்துள்ளது. தொடர்ந்து அரசியல் செய்வதாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி முஸ்லிம் கட்சிகள் விடயத்தில் அவதானம் தேவை என்றனர். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe