அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு இன்று (03.03.2022) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கௌரவ மாநகர முதல்வர், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி, பிரதேச உள்ளக அபிவிருத்தி குறித்து சபையினருக்கு தெளிவுபடுத்தினார்.பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மாநகர பொதுமக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் நாம் கூடிய கரிசனையோடு செயற்பட்டு வருகின்றோம்.
மாநகர சபையின் நாளாந்த செயற்பாடுகளை தடங்கல் இன்றி செயற்படுத்த தேவையான எரிபொருளை உள்ளூர் எரிபொருள் விற்பனையாளர்கள் விநியோகம் செய்து தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெரும் தொற்று காரணமாக சிதைந்து போய் இருக்கும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு விரைவில் சீரடையும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளை, உலகளாவிய ரீதியில் பேசப்படும் உக்ரைன்-ரஷ்யா யுத்தம்-அதனோடு இணைந்த தொடர் பதட்டம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அனைத்து நாடுகளையும், மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதை நாம் மறுக்க முடியாது.
உலகத்தில் தற்போது நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்து நெருக்கடி நிலைகளில் இருந்தும் விரைவில் மீட்சி கிடைக்க வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம் என கௌரவ மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் உரையாற்றினார்.
மேலும், வெல்லவாய- எல்லாவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற வேளை எதிர்பாராத விதமாக மூழ்கி மரணித்த அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களான அப்துல் ஹசீன் ஹயான், றிபாத் அஹமத் ஆகியோருக்கும்- மற்றும் அண்மையில் சுகயீனம் காரணமாக காலமான மாநகர சபை ஊழியர் முஹம்மத் றிஸ்வி ஆகியோருக்கும் இன்றைய மாநகர சபை அமர்வின் போது அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
-முதல்வர் ஊடகப்பிரிவு-