நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் வரவிண்மை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, தூர இடங்களிலிருந்து வருகை தரும் ஆசிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருள் கிடைக்காமை மற்றும் சரியான போக்குவரத்தின்மை போன்ற காரணிகளால் ஆசிரியர்களால் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாமை, வரவின்மை என்பவற்றால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், மாணவர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் பாடசாலைக்கு வந்து கற்பித்தல் நடைபெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலையும் காணப்படுகின்றது.
அத்தனையும் தாண்டி வரிசையில் வெகு நேரம் காத்திருந்து எரிபொருள் கிடைக்காமையால் பாதிப்படைந்த ஆசிரியர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில், இன்றைய தினம் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த பிரதேச ஆசிரியயொருவர் தனது ஆதங்கத்தை எம்மிடம் தெரிவித்தார்.
ஏனைய திணைக்களம் போன்று கல்வித் திணைக்களமும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் கிடைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தற்போது ஏனைய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விஷேட அனுமதி நடைமுறை மூலம் எரிபொருளைப்பெற்று தமது கடமைகளுக்கு செல்கின்றனர்.
ஆசிரியர்களாகிய எமக்கும் பொறுப்புண்டு. நாம் உரிய நேரத்துக்கு பாடசாலைச் சென்று கற்பித்தலை மேற்கொள்ளாவிட்டால் பல்வேறு சிரமங்களைத் தாண்டி பாட்சாலை வரும் மாணவர்கள் கற்பித்தல் நடைபெறவில்லை என்ற ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஆகவே, இது தொடர்பில் கோட்ட மற்றும் வலயப் பணிப்பாளர்கள் கவனஞ்செலுத்தி உரிய ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.
நீண்ட நேரம் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து விஷேட அனுமதிகள் ஏதுமில்லை என்ற காரணங்களைக்காட்டி ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்படும் அதே வேளை, ஏனைய அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் எரிபொருளைப் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான அசெளகரியங்களைத் தவிர்க்கும் வகையிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும் தூர இடங்களுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கும் எரிபொருள் கிடைக்க ஆவண செய்ய வேண்டுமென தனது ஆதங்கத்தையும் வேண்டுகோளையும் தெரிவித்தார்.
எரிபொருள் கிடைக்காமையாலும் கட்டண அதிகரிப்புக் காரணமாக முச்சக்கர வண்டிகளில் பாடசாலைக்கு வரும் தரும் மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை வரவின்மையும் அதிகரித்துள்ளது.
அதையும் தாண்டி பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களால் ஆசிரியர்கள் வராமையால் கற்பித்தல் செய்றபாடுகள் நடைபெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் துர்ப்பாக்கிய நிலையும், சில பாடசாலைகளில் ஆசிரியர் வரவின்மையால் ஆரம்பப்பிரிவு மாணவரகள் பாடசாலை ஆரம்பிக்கும் வேளையிலேயே திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அத்தோடு, அண்மையில் அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியர்கள் பிரதேசத்திலுள்ள வெவ்வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படமையாலும் அசெளரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போதைய இக்கட்டான சூழல் நிலையைக் கருத்திற்கொண்டு அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்ற அனுமதிக்க வேண்டியதும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் கல்வி அதிகாரிகளின் கடமையாகும்.
மேற்குறித்த நியாயமான காரணங்களின் அடிப்படையில் ஆசிரியர்களும் இலகுவாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள விஷேட அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.