சம்மாந்துறை அன்சார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மட்டுப்படுத்த நிலையில் எரிபொருள் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சம்மாந்துறையில் கபூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கவிருப்பதாக வதந்தி பரவியதையடுத்து அங்கு சுமார் 2 முதல் 3 கிலோ மீட்டர் வரை நிரையாக மக்கள் தத்தமது வாகனங்களுடன் இரண்டு நாட்களாக அதிகாலை முதல் மாலை இரவு என காத்திருந்து ஏமாற்றத்துடன் செல்கின்றமையை காண முடிந்தது. அதே போன்று சம்மாந்துறையில் உள்ள ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல்-டீசல்களுக்காக இன்னும் வாகனங்கள் வரிசையில் காத்திருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.
அம்பாறை மாவட்டத்திற்கான எரிபொருட்கள் சுழற்சி முறையில் வருவதுடன், மக்கள் இணைய வழியூடாக பரவும் செய்திகளை நம்பியும், சிலர் வதந்திகளையும் நம்பி குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்தை வந்தடைகின்றனர்.
அத்துடன், குறித்த எரிபொருள் நிலையங்களில் எவ்வித ஒழுங்கமைப்புகளுமின்றி மக்கள் அதிகளவாக குவிந்து காணப்படுவதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதற்றமான சூழலும் நிலவி வருகின்றது. இதனால் சில இடங்களில் பொதுமக்களுக்கும் எரிபொருள் ஊழியர்களுக்கிடையேயும் முரண்பாடுகள் உருவாகின்றன. மேலும், இதனைத்தொடர்ந்து இராணுவம் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவ்விடத்திலிருந்து பொதுமக்கள் அகன்று செல்வதை தினமும் காண முடிகின்றது.
மேலும், சம்மாந்துறையில் நிலவிவரும் எரிபொருள் பற்றாக்குறையினால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. எரிபொருள் பற்றாக்குறையினால் அநேகமான இடங்களில் துவிச்சக்கர வண்டிப் பாவனையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல ஊர்களிலும் இதே நிலைமைதான் நிலவு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.