(அஸ்லம் எஸ்.மௌலானா)
அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணிக்கொடைகளை கால தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட ஓய்வூதியர்களின் நலன் பேணும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை வலியுறுத்தி அமைப்பின் செயலாளர் எம்.எம்.ஆதம்பாவா பிரதமர், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
அரசாங்க சேவையில் 20 முதல் 30 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 24 மாதங்களுக்கான ஓய்வூதிய தொகையை உள்ளடக்கிய ஓய்வூதிய பணிக்கொடை 2020 ஆம் ஆண்டுக்கு பின் ஓய்வுபெற்ற பலருக்கு இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இக்கொடுப்பனவை உரிய காலத்திற்கு அரசு வழங்காமையால் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கிச் சலுகையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கும் மன உழைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இது பெரும் அநீதியான செயற்பாடாகும்.
இவ் ஓய்வூதிய பணிக்கொடை கிடைக்கப் பெறாமையினால் வீடொன்றை அமைத்துக் கொள்ளவோ பிள்ளைகளின் திருமணம் போன்ற காரியங்களை நடாத்தவோ இதர தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாத கையறு நிலையில் குறித்த ஓய்வூதியர்கள் திண்டாடி வருகின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மிக்க காலத்தில் இந்த ஓய்வூதிய பணிக்கொடை கிடைக்குமாயின் அது பேருதவியாக இருக்கும்.
ஆகையினால், இனியும் தாமதிக்காமல் உடனடியாக இக்கொடுப்பனவை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- என அம்மகஜரில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.