Ads Area

நோன்புகாலங்களில் சகல டியூஷன் வகுப்புகளையும் லுஹர் தொழுகைக்கு முன்னர் முடித்துக்கொள்ளுமாறு ஜம்இய்யதுல் உலமா, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் வேண்டுகோள் !

 நூருல் ஹுதா உமர்


மருதமுனை ஜம்இய்யதுல் உலமா, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுக்கும் புனித ரமழான் வேண்டுகோள் எனும் தலைப்பில் மருதமுனை ஐம்இய்யதுல் உலமா அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநலன் சார் அமைப்புக்களின் சம்மேளனம் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு எடுத்துக்காட்டாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ரமழான் என்பது மறுமை வியாபாரிகளின் பருவ காலமாகும். இக்கால கட்டத்தில் அல்லாஹ்வின் அருள், பாவ மன்னிப்பு, நரக விடுதலை போன்ற நற்காரியங்கள் செய்து ஒரு பர்ழுக்கு 70 பர்ழுடைய நன்மையையும், ஒரு ஸூன்னத்திற்கு ஒரு பர்ழுடைய நன்மையையும் நாம் பெற்றுக் கொள்ள தயாராகுவோமாக என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.


மேலும் இம்மாதம் பின்பற்றவேண்டிய முக்கிய சில வேண்டுகோள்களை அந்த அறிக்கையில் விடுத்துள்ளனர். அதில் " ரமழான் அல்குர்ஆனுடைய மாதம் " என்ற வகையில் அதிகம் அதனை ஒதுவோம். அதனுடைய பொருளை விளங்குவோம் என்ற அடிப்படையில் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா " வளர்ந்தோருக்கான அல்குர்ஆன் ஒதுதல் பயிற்சி " ஒன்றை நடாத்தவிருக்கின்றது . அத்தோடு தராவிஹ் தொழுகையின் பின் நடாத்தப்படும் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸையும் பயன்படுத்தி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொடுள்ளனர்.


ஸஹர் வேளையில் நேரகாலத்துடன் எழும்பும் வகையில் தஹஜ்ஜுத் உடைய அதான் சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் மு.ப. 3.45 மணிக்கு ஒலிக்கச் செய்ய முஅத்தின்மார்களுக்கு வசதி செய்து கொடுத்தல், ரமழான் நோன்பு விடுமுறை முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதனை இபாதத் செய்வதற்கும், ஆன்மீக மேம்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டியிருப்பதால் சகல டியூஷன் வகுப்புகளையும் லுஹர் தொழுகைக்கு முன் முடித்து மாணவர்களின் நல்லொழுக்க செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளிக்குமாறு சகல பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


நோன்பின் மாண்பை பேணும் வகையில் பகற்காலங்களில் அஸர் தொழுகை வரை சகல உணவகங்கள், சிற்றுண்டி, தேநீர் கடைகளை திரையிட்டு ரமழானின் மாண்பைப் பேணுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இராக்காலங்களில் பெண்கள் மஸ்ஜித்களுக்கு இபாதத்களுக்காக வரும் போது வீதிகளில் தேவையற்ற தொந்தரவுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து பெண்களின் கண்ணியத்தைக் காத்து இளைஞர்கள், மாணவர்கள் மஸ்ஜிக்களுக்கு வருகை தந்து அமல் இபாதத்களில் ஈடுபடுமாறும் வேண்டி பொது மக்கள் புனித ரமழானில் நோன்பு நோற்று , பாவங்களை பரிசுத்தப்படுத்தி இறையருளையும், திருப்தியையும் பெற முயற்சிக்குமாறு மருதமுனை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மருதமுனை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe