நூருல் ஹுதா உமர்
உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் தேசிய உணவுப்பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் பைஸல் முஸ்தபாவின் தலைமையில் மாவடிப்பள்ளி பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் இன்று (29) திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது.
உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுசுகாதார பரிசோதர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல்.எம்.சப்னூஸ் ஆகியோரால் பரிசோதிக்கப்பட்டது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் அழிக்கப்பட்டது. அதே போன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி தலைமையில் நற்பிட்டிமுனை உணவகங்களில் உணவு நிலையங்கள் இன்று (29) மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எம். பாரூக், பொதுச்சுகாதார பரிசோதகர்களான அப்பாஸ் நியாஸ், ஜே. நிஜாமுதீன், ஐ.எல். இத்ரீஸ், எம்.ஜே. ஜுனைதீன் ஆகிய குழுவினரால் திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டு உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தொடர்ந்தும் மக்களின் சுகாதாரத்தை கவனத்தில் கொண்டு இவ்வாறான திடீர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.