Ads Area

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது.

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கைவரிசை காட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் அண்மையில் (26.04) தெரிவித்தனர். 


வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு  அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த வீதியில் முகத்தை மூடி துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், குறித்த பெண்ணின் மோட்டர் சைக்கிளையும் பறித்து சென்றனர். 


இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்கா (37348), திலீப் (61461), திசரட்ட (3419) பொலிஸ் கான்டபிள்களான உபாலி (60945), தயாளன் ( 91792), இரேசா (11643) பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.


இவ் விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிதம்பரபுரம் (வயது 35), மதவுவைத்தகுளம் (வயது 35), சிறிராமபுரம் (வயது 34) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அபகரிக்கப்பட்ட மூன்று அரைப் பவுண் நகைகள் உருக்கப்பட்ட நிலையில் யாழில் உள்ள நகைகடை ஒன்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. பறித்து செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 


இதைவிட இரண்டு பென்ரன் மற்றும் லப்டொப் என்பனவும் குறித்த மூவரிடம் இருந்து மேலதிகமாக மீட்கப்பட்டுள்ளது. இவை கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திருடப்பட்டவை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 


மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe