Ads Area

கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை : இன்று அடையாளம் காணப்பட்ட இடத்தில் சிரமதானப்பணி !

 நூருல் ஹுதா உமர்.

 

இலங்கை தேசத்திற்கும், முஸ்லிம் மக்களுக்கும் அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு அதன் முதல் கட்ட சிரமதானப்பணி இன்று (20) அவரது சொந்த தொகுதியான கல்முனையில் அடையாளம் காணப்பட்ட காணியில் முன்னெடுக்கப்பட்டது. 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முன்னிலைப்படுத்தலுடன் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், தலைவர் அஷ்ரபின் அபிமானிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் இந்த சிரமதானப்பணி இன்று காலை  இடம்பெற்றது. 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் எம்.எச்.எம். அஷ்ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இத்திட்டத்திற்காக 25 மில்லியன் ரூபா முதற்கட்டமாக ஒதுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்கான நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.


அதனையொட்டியதாக துரிதமாக நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இந்த சிரமதான பணியில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அசீம், பொறியலாளர் அப்துல் ஹலீம் ஜௌஸி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பீ.ரீ. ஜமால், கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், தலைவர் அஷ்ரபின் அபிமானிகள் எனப்பலரும் பங்குகொண்டிருந்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe