Ads Area

நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் பொருத்தமான ஜனாதிபதி ரணிலே : மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்கிறது ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி.

 (நூருல் ஹுதா உமர்)


உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை எப்போதே கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் துரதிஷ்டவசமாக கடந்த கால ஆட்சியாளர்களினால் அந்த வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொருளாதார பேரழிவை சந்தித்து படுகுழியில் விழுந்திருந்த எமது நாட்டை இரண்டே வருடங்களில் மீட்ட ஜனாதிபதி ரணிலை நாம் பலப்படுத்தி நாட்டை தலைசிறந்த நாடாக முன்னேற்றவே எங்களின் கட்சி ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்தது என்று ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர்,


நாடு பொருளாதார பின்னடைவை சந்தித்து வங்குரோத்து நிலைக்கு சென்று கொண்டிருந்த போது இப்போது நாட்டை ஆட்சி செய்ய கேட்கும் சஜித் பிரேமதாச, அனுரகுமார, நாமல் போன்றோர்கள் தலையை காப்பாற்ற தப்பி ஓடிய போது தேசிய பட்டியல் எம்.பியாக பாராளுமன்றம் நுழைந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தைரியமாக முன்வந்து நாட்டை பெறு பெற்றார். மட்டுமின்றி இரண்டே ஆண்டுகளில் இலங்கையை அந்த நிலையிலிருந்து மீட்டும் காட்டினார்.


பெட்ரோலுக்கும், டீசலுக்கும், மருந்துக்கும், பால்மாவுக்கும், எரிவாயுக்கும் நாள்கணக்கில் வெயிலிலும், மழையிலும் பட்டினியோடு தவமிருந்த இலங்கையர்களை வீட்டில் நிம்மதியாக தூங்க வைத்த பெருமை ஜனாதிபதி ரணிலையே சாரும். வர்த்தகர்கள், பொருளாதார சிதைவினால் இன்னல் உற்றபோது டொலரை ஒரு நிலையான இடத்தில் ரணிலின் அனுபவ முதிர்ச்சி அரசியல் நிலைநிறுத்தியதை நாம் மறந்து விட முடியாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீழ்ந்த நாடுகளில் விரைவாக எழுந்த நாடாக இலங்கை மிளிர காரணம் ரணிலின் அரசியல் முதிர்ச்சியும், சர்வதேச அரசியலின் அனுபவமும், திறமையுமே.


மக்கள் செல்வாக்கு நிறைந்த 100க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களையும், இலங்கையின் அதிக அரசியல் கட்சிகளையும், அதிகூடிய இலங்கையர்களின் நன்மதிப்பையும் பெற்ற ஜனாதிபதி மக்களுக்கு கஷ்டம் என்றவுடன் எவ்வாறு முன்வந்து தீர்வை கண்டரோ அதே போன்று மக்களுக்கும் ரணிலை ஜனாதிபதியாக மீண்டும் ஆட்சி பீடம் ஏற்ற தயாராகி விட்டார்கள். உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சுக்களுக்கு மக்கள்  அடிபணியாமல் நாட்டில் மீண்டும் அரகல ஒன்றை தவிர்க்கும் விதமாக பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதி ரணிலை ஆதரிப்பார்கள்.


பெரும்பான்மை சிங்கள மக்களினது மட்டுமல்ல தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, மலையக மக்களின் அதி கூடிய வாக்கும் ரணிலுக்கே உள்ளது என்பதை செப்டம்பர் 22 இந்த நாடு தெரிந்து கொள்ளும் என்றார். இந்த ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தவிசாளர் பொறியியலாளர் என்.ரீ.எம். சிராஜுதீன், செயலாளர் எம்.பி.எம். நிஹாப் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe