Ads Area

இலங்கையிலிருந்து முதல் ஹஜ் குழு இன்று பயணம் : தூதுவர் வழியனுப்பி வைத்தார்.

 நூருல் ஹுதா உமர்.


புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கிப் பயணிக்கின்ற முதல் ஹஜ் குழுவை வழியனுப்பும் நிகழ்வு இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கலந்து கொண்டு ஹாஜிகளை வழியனுப்பி வைத்தார். 


இதன் போது கருத்துத்தெரிவித்த சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி,


அனைத்து உலக முஸ்லிம்களாலும் போற்றி விரும்பப்படுகின்ற இஸ்லாத்தின் ஐந்தாவது முக்கிய கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பயணிக்கும் ஹாஜிகளை வழியனுப்பி வைக்கும் நிaழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய அரசாங்கம், ஹஜ்ஜுக்காக வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்குப் பணியாற்றுவதில் முழுமொத்த பங்களிப்பையும் தவறவிடாமல் செயற்பட்டு வருகிறது. 


ஹஜ் யாத்திரிகர்கள் சவூதிக்குள் வந்ததிலிருந்து தத்தமது நாட்டுக்கு திரும்பும் வரை அனுபவிக்கும் நலன், பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதிப்படுத்துவதற்கு நாட்டின் அனைத்து வளங்களையும் சவூதி அரசாங்கம் பயன்படுத்துகிறது.


இந்தாண்டு ஹஜ் கடமைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவூதி அரேபிய இராச்சியத்துடன் தொடர்புடைய நிறுவனங்களால் முழுமையாக பூரணப்படுத்தப்பட்டுள்ளன. 


யாத்திரிகர்கள் பாதுகாப்பாக, அமைதியான முறையிலும் ஆன்மிக ரீதியாக நிறைவு பெறும் வகையிலும் ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்காக சுகாதாரம், ஒழுங்கமைப்பு, தொழிநுட்பம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புகள் சிறப்பாக நடைபெறுவதற்காக, சவுதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கையின் அதிகாரிகள் வழங்கிய பயனுள்ள ஒத்துழைப்புக்கு இதயம் கனிந்த பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம். 


இந்த ஒத்துழைப்பு, எமது இரு நாடுகளுக்கிடையிலான உறுதியான மற்றும் நட்பான உறவுகளைப் பிரதிபலிப்பதாக அமைகிறது.


எனவே, இறுதியாக ஹஜ்ஜுக்காக செல்கின்ற அனைத்து யாத்ரிகர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


உங்கள் அனைவரது ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டு, எல்லோரது பாவங்களையும் மன்னித்து, பத்திரமாக திரும்பி வர அல்லாஹ் அருள்புரியட்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அல்லாஹ் எமது நாடுகளை அமைதியாலும் வளமையாலும் தொடர்ந்தும் அருள்புரியட்டும் என்றார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe