Ads Area

கல்முனை மாநகர சபையின் ஆட்சியை நாம் கைப்பற்றுவோம் - சம்மாந்துறை உதுமான்கண்டு நாபீர் முழக்கம்.

 (எஸ்.அஷ்ரப்கான்)


விரைவில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்ற கல்முனை மாநகர சபைத்தேர்தல் நடைபெற்றால், அதில் எமது கட்சி சார்ந்த வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி கல்முனை மாநகரத்தில் முன்னொரு போதுமில்லாத புதிய வியூகங்களுடன் மாற்றமான செயற்பாடுகளுடன் மக்களுக்கு சேவை வழங்க நாம் தயாராகவிருக்கின்றோம் என நாபீர் பவுண்டேஷன் இஸ்தாபகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு  நாபீர் தெரிவித்தார்.


சிலோன் ஜெர்னலிஸ்ட் போரத்தினுடைய கௌரவிப்பு நிகழ்வு சம்மாந்துறையில் அண்மையில்  (23)  தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஜவுபர் தலைமையில் இடம்பெற்றது.


இங்கு ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் அவர் அங்கு குறிப்பிடுகையில்,


நாம் அரசியலுக்கோ அல்லது சேவை செய்வதற்கோ புதியவர்களல்ல. கடந்த 35 வருட காலமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழ்ப்பிரதிநிதித்துவங்களையும் இணைத்துக் கொண்டு ஆட்சியைக்கைப்பற்றுவோம். 


கல்முனை மாநகரத்தில் எமது ஆட்சியின் போது சுமார் 500 தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கத் தீர்மானித்துள்ளோம். இதற்கான நிதியினை வெளிநாடொன்றுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு கொண்டு வருவதுடன், கல்முனை பிரதேசத்திலுள்ள பள்ளிவாயில்களில் கடமையாற்றுகின்ற முஅத்தீன், உலமாக்களும் தமிழர் பிரதேசங்களிலுள்ள மதஸ்தலங்களில் சேவை செய்கின்ற மதகுருக்களும் இதில் உள்வாங்கப்படுவார்கள். 


மக்களிடம் அறவிடப்படுகின்ற நியாயமான வரிகள் முஅத்தின், மதகுருக்கள் மற்றும் உலமாக்களைக் கொண்டு அறவிடப்படும். இதனூடாக கல்முனை மாநகரத்தில் போதிய வருமானமற்ற சாராருக்கும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது. அது போல், ஈ.சி.எம்.கெம்பஸ், தொழில் நிறுவனம், தனியார் வைத்தியசாலை என எமது திட்டமிள்ளது.


இவ்வேலைத்திட்டத்தினை கல்முனை மாநகரத்தில் நாங்கள் வகுத்திருக்கின்ற ஏனைய வேலைத்திட்டங்களையும் செயற்படுத்துவதற்கான வாய்ப்பினை கல்முனை மாநகர மக்கள் நான் சார்ந்த கட்சிக்கு வழங்குகின்ற போது, அடுத்த கணமே இதனை செயற்படுத்துவதற்கும் வெளிநாட்டுதவியை கல்முனை மாநகரத்துக்கு கொண்டு வருவதற்கும் ஒப்பந்தங்கள் இடம்பெற்று சாத்தியமாகின்ற சகல வேலைகளும் நடைபெறும்.


கடந்த காலங்களில் ஆட்சி செய்த அனைவரும் தங்களது அஜந்தாக்களை  நிறைவேற்றினார்களே தவிர, மக்களுக்கு சாத்தியமான எந்த சேவையையும் செய்யவில்லை. கல்முனை மாநகர அபிவிருத்தியை கருத்திற்கொள்ளவில்லை.

 

இது எதிர்காலத்தில் எமது கட்சியினூடாக சாத்தியப்படும். முஸ்லிம்களின் ஏகபோக கட்சி எனச்சொல்லப்படுகின்ற முஸ்லிம் காங்கிரசாக இருந்தாலும் சரி, அகில இலங்கை மக்கள் காங்கிரசாக இருந்தாலும் சரி அமையவிருக்கின்ற கல்முனை மாநகர சபை ஆட்சியில் எமது வியூகங்களை தாண்டி வெற்றி பெற்று காட்டுவார்களா?


மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்ற காலம் மலையேறி விட்டது. இனி மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல்வாதிகள் உருவாக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் தான் முழு முஸ்லிம், தமிழ் உறவுகள் இணைந்து நாங்கள் கல்முனை மாநகரத்தைக்கட்டியெழுப்ப முன் வருவோம். இதற்காக மக்களது ஆணை எங்களுக்கு அவசியமாகும்.


எனவே, கல்முனை மக்கள் சிந்தித்து இம்முறை  செயலாற்ற வேண்டுமென்ற வேண்டுகோளை நாங்கள் விடுகின்றோம் எனக்கூறினார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe