பாறுக் ஷிஹான்.
கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 48 வயதுடைய சந்தேக நபர் குறித்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இக்கைது சம்பவம் இடம்பெற்றது.
சம்மாந்துறை மலையாடி கிராமம் 02 பகுதியைச்சேர்ந்த கைதான 48 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 70,000 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.
இக்கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமாரவின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருட்கள் யாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

