சம்மாந்துறை என்ற பெயர் வந்தமைக்கு பல கதைகள் சொல்வார்கள்.
சம்மான் என்ற ஒரு குழுவினரே இவ்வூருக்கு ஓடத்துறை வழியாக முதலில் வந்திறங்கியதால் சம்மான் வந்திறங்கிய துறை. “சம்மாந்துறை” என்று அழைக்கப்படாலாயிற்று என்பது ஒரு கதை.
வர்த்தகர்கள் ஓடத்துறை வழியாக வந்திறங்கிய போது இப்பிரேதேசத்தின் கரையோரம் செம்மண்ணினால் செண்ணிறமாகக் காணப்பட்டதாகவும். அதனால் இது செம்மண்-துறை என்று அழைக்கப்பட்டதாகவும். பின்னர் சம்மாந்துறையாக மாற்றம் பெற்றதாகவும் சொல்கிறது இன்னுமொரு கதை.
இப்படி பல கதைகள் உலவுகின்ற போதும். பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, சரித்திரச் சான்றுகள் உள்ள ஆதாரபூர்வமான விடயம்தான்.... கீழே வருகின்றது.
தென்னிந்திய மக்கள் தோணியை “சம்மான்”என்றே அழைப்பார்கள். இதனால் சம்மான் (தோணி) வந்து தரிக்கும் துறையை சம்மான்-துறை என்று அழைக்கலாயினர். இப்போதும் தோணியின் பெயரைக் கொண்டே இவ்வூரின் பெயர் சம்மாந்துறை என அழைக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில்தான் முஸ்லிம்களின் வருகை இடம்பெற்றிருக்கின்றது.
இறுதியாகச் சொல்லப்பட்ட இதுதான் சம்மாந்துறை என்ற பெயர் வந்தமைக்குரிய வரலாறு என்று எமதூரின் மூத்தவர்களும், ஊரின் சரித்திரம் அறிந்தவர்களும் உறுதியாகக் கூறுகின்றனர்.