தகவல் - Mohamed Habeebullah
சீன அரசின் வைத்திய வசதி மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் சீன நாட்டின் எக்ஸிம் வங்கியூடான நிதியில் சகல வசதிகளும் கொண்ட ஒரு சத்திர சிகிச்சை கூடம் மற்றும் நான்கு மாடிகளுடன் கூடிய உத்தம வசதிகளைக் கொண்ட விடுதிகளுக்கான கட்டிடத்தொகுதி என்பன இவ்வருடத்தினுள் கட்டி முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதுடன் அதற்காக கடந்த 04ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அனுமதியும் பெறப்ப்பட்டுள்ளதாக சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசிம் தெரிவித்தார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற அனைத்து கடிதங்களின் பிரதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர்களிடம் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைஸல் காசிம் இன்று கையளித்துள்ளார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கான இக்கட்டிடத்தொகுதி 55,450 சதுர அடிகளைக் கொண்டதும் இத்திட்டத்தின் மிகப் பெரிய விஸ்தீரணத்தைக் கொண்டதுமாக அமையவுள்ளது. சீன அரசின் உதவித் திட்டத்தில் அமையப் பெறும் இந்த வைத்திய வசதி மேம்பாட்டு உதவி செயல் திட்டமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி அமைச்சர் பைசல் காஸீம் அவர்களின் பாரிய முயற்சிக்குக் கிடைத்த பெறுபேறாகும் என்று மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
இத்திட்டம் முழுவதற்குமான நிதியை சீன நாட்டின் எக்ஸிம் வங்கியூடாக வழங்கப்படவுள்ளது. இம்முயற்சியை பயனுள்ளதாக்கிய பிரதி அமைச்சர் எம்.சீ.பைஸல் காஸிம் அவர்களுக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்எம்.மாஹிர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர்கள் தனது விசேட நன்றிகளை தெரிவித்துள்ளார்.