Ads Area

அம்பாறை கலவர சூத்திரதாரிகளை கைது செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமரைக் கோரியுள்ளோம்

அன்சார் காசீம்.

அம்பாறை நகரில் நேற்றுமுன்தினம் பெரும்பான்மையின குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் கண்டித்தக்கதாகும். முஸ்லிம் மக்களை ஆத்திரமூட்டச் செய்யும் இது போன்ற நடவடிக்கைகளின் போது நாட்டு முஸ்லிம்கள் மிகவும் விவேகத்துடனும், இயன்றவரை அமைதி காத்து பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.



அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் உணவகங்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையை தவிர்க்கும் பொருட்டு இடம்பெற்ற விசேட கூட்டம் இன்று (28) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஸார், சம்மாந்துறை நம்பிக்கையார் சபையின் தலைவர் கே.எம். முஸ்தபா, இம்இயத்துல் உலாமா சபையின் தலைவர் மௌலவி அப்துல் காதர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதர், மஜ்லிஸ் அஷ்ஷீரா சபை உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்கள்.



அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – முஸ்லிம் மக்கள் மீது பெரும்பான்மையின மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்வதன் மூலம் நாட்டில் இனக்கலவரங்களை உருவாக்குகின்ற சதித்திட்டங்கள் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் அங்கமாகவே அம்பாறை தாக்குதல் சம்பவமாகும். இச்சூழலில் மக்கள் பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு மக்களை வழிப்படுத்துகின்ற பொறுப்பினை அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டும். 



எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமரைக் கோரியுள்ளோம். நாட்டின் நிலைப்பாட்டினை அறிந்து முஸ்லிம் மக்கள் முஸ்லிம் மக்கள் குழம்பி விடாமல் பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும். என்றார்.

இங்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சம்மாந்துறை நம்பிக்கையார் சபையின் தலைவர் ஆகியோர்களும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe