ஆட்சியின் பங்காளிகளாக முஸ்லிம் தலைமைகள் இருந்து சாதித்தது என்ன?
நல்லாட்சியில் மாத்திரம் முஸ்லிம்களுக்கெதிரான நூற்றுக்கும் மேற்பட்ட வன்முறைகள்; இது வரையில் எதற்கும் சரியான நீதி கிடைக்கவில்லை
- கியாஸ் ஏ. புஹாரி - (சுடர் ஒளி)
மழையில் முளைக்கும் காளான்கள் போன்றதே எமது நாட்டில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற இன வன்முறைகள். சட்டென்று தோன்றி அதே கனநொடியில் எந்தத் தடயமும் இல்லாமல் மூடிமறைக்கப்படுகின்றது. இந்த நாட்டில் தமிழர்களும், முஸ்லிம்களும் சிறுபான்மையாக வாழுகின்ற நிலையில் சமாதானம் எனும் தொனிப்பொருள் வெறும் வெற்றுப்பேச்சாகவே கருதவேண்டியுள்ளது.
நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழ்கின்ற நாடு எனும் இனத்துவேசமான கருப்பொருளும், ஒரு சிலரால் நடாத்தப்படுகின்ற வன்முறை சம்பவங்களும்; நாட்டிலுள்ள முழு சிங்கள மக்கள் மத்தியிலும் பேரினவாத சக்தியை தூண்டும் வகையில் அமைகின்றது. அதாவது ஒரு சில விஷமிகளின் அராஜகங்களினால் ஏனைய பௌத்த சகோதரர்களை நாம் தவறாக எண்ணுவதும் தவறே.
இந்தக் கட்டுரை மூலம் தெரிவிக்கவரும் விடயமானது, கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு அம்பாறை நகரில் இடம்பெற்ற சம்பவம் நாம் யாவரும் அறிந்த விடயம் இந்நிலையில் அவ்வாறன பிரச்சினை திட்டமிட்ட ஏற்பாடகவே இருக்கும் என்பது பலதரப்பட்ட தேடல்களின் உண்மையாகும்.
அம்பாறை மாவட்டம் என்பது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் செறிந்து வாழக்கூடிய ஒரு மாவட்டம் இம்மாவட்டத்தின் ஒரு முக்கிய நகரமாகவே அம்பாறை நகரம் கருதப்படுகின்றது. அம்பாறையில் முஸ்லிம் குடியிருப்புகள் அரிதாக இருந்தாலும் அதிகமான அரச காரியாலயங்களும், மாவட்ட உயர் நிறுவனங்களும் அங்கேதான் அமைந்திருக்கின்றன.
அங்குள்ள முஸ்லிம் ஊழியர்கள் தொழுவதற்காகவும், அதேநேரம் அம்பாறையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தொழுவதற்காவும் அமைக்கப்பட்ட பள்ளியே இதுவாகும். இற்றைக்கு சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் என்றே இதனை கூற வேண்டும். அது மாத்திரமல்லாமல் அந்தப் பள்ளிவாசலானது குறிப்பிட்ட சில வருடங்களாக விஸ்தரிக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு வேளையில் அம்பாறை ரீகல் சந்தியிலுள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சம்பவத்திற்காக பள்ளிவாசலை உடைத்து, புனித அல் குர்ஆனை எரித்தது, அத்தோடு அந்தப் பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள ஹோட்டலையும் தீ வைத்தமை எந்தவகையிலும் நியாயபூர்வமானதல்ல. (குறிப்பு: அம்பாறை ரீகல் சந்திக்கும் அம்பாறை பள்ளிவாசலுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 1 கி.மீ)
அதேநேரம் இந்தப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக்குவதற்கு இவ்வாறான இனவாத கிளர்ச்சியாளர்கள் பாவித்த தொனிப்பொருள்தான் ஹோட்டலில் வழங்கப்பட்ட சாப்பாட்டில் கருத்தடை மாத்திரை பாவிக்கப்பட்டிருக்கின்றது என்கின்ற விடயம். ஆனால் அவ்வாறான ஒரு காரியத்தை ஈமானுள்ள ஒரு முஸ்லிம் எப்போதும் செய்யமாட்டான் என்பதை முதலில் சொல்லிக்கொள்கின்றேன். அது மாத்திரமல்லாமல் அவ்வாறு கூறப்பட்ட தகவலை மேலும் அலசிப்பார்ப்போமேயானால்,
இலங்கையில் நடைமுறையில் உள்ள கருத்தடை முறைகள்:
01. வாய் மூலம் உட்கொள்ளும் OCP எனப்படும் கருத்தடை மாத்திரை. இதன் செயற்பாட்டுக் காலம் ஒரு நாள் மாத்திரமே.
02. Depot Injection எனும் ஊசி. 3 மாதம் கருத்தடை.
03. Jadelle என்னும் கையில் பதிக்கும் சிறிய tube (3 தொடக்கம் 5 வருட கருத்தடை )
04. IUCD எனும் கருப்பைக்குள் வைக்கும் சாதனம். (5 வருட கருத்தடை)
05. மேட்சொன்ன 4 உம் பெண்களுக்கு உரியது. இதற்கு மேலதிகமாக நிரந்தர கருத்தடை முறையான surgery செய்தல் (பெண்களுக்கு LRT, ஆண்களுக்கு Vasectomy)
இது மாத்திரமல்லாமல் இன்னுமொரு விடயத்தை நாம் இங்கு உற்றுநோக்க வேண்டும், அதாவது எந்தவிதமான மருந்துவகையாக இருந்தாலும் அது 25°C வெப்பமேறும்போது அந்த மருந்து செயலிழந்துவிடும், இதன் காரணமாகத்தான் பாமசிகளில் குளிரூட்டி பயன்படுத்த வேண்டிய
கட்டாயம் விதிக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே, பௌதீக ரீதியாக நிலைமை இவ்வாறு இருக்கும்போது கருத்தடை மாத்திரை கலந்தமை எவ்வாறு சாத்தியப்படும்?
இவை தவிர சம்பவம் நடைபெற்ற, பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் சமூகவலைத்தளங்களில் அங்கு நடந்த நிகழ்வை வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், குடியோதை நிலையில் சிங்கள சகோதரர் கடைக்கு வந்து உணவுகேட்டதை தொடர்ந்து அவர் இறைச்சிக் கறியும் கேட்டிருக்கிறார், அதனை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அந்தக் கறியினுள் கரையாயத நிலையில் கிடந்த கோதுமை மாவு உருண்டைகள் ஒருசிலதை அவர் கையில் எடுத்து, இது கருத்தடை மாத்திரை என்றும் தாங்கள் கொத்துரொட்டிகளிலும், ஏனைய உணவுகளிலும் இவ்வாறு கலப்படம் செய்வாதகவும் சம்பவத்தை மாற்றுத்திசைக்கு திருப்பினார். அதன் பின்னர் அவர் விடயத்தை பெரிதாக்கி இன்னும் பல சுமõர் 30 இற்கும் மேற்பட்டோருடன் கடைவரை படையெடுத்து ""நீ மருந்து போட்டதானே, நீ போட்டதானே சொல்லு, முன்னர் ஆம் என்றாய் தானே?'' என்று அதட்டியவண்ணம் கேட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இதே கேள்வியை கடையிலிருந்த அவருடைய சகோதரனிடம் கேட்டபோது அவர் இல்லை என மறுத்துள்ள நிலையில் அவரை அடித்துள்ளனர். அவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கடை உரிமையாளர் சற்று பதட்டத்துடனும், பயத்துடனும் இருந்த வேளையில் மீண்டும் இதே கேள்வியை இவரிடம் வினவியுள்ளனர். அதன்போது இவரும் தன்னுடைய உயிருக்கு பயந்த நிலையில் ஆம் என்று தலையசைத்து விட்டார். சற்று சிந்திப்போமேயானால் இவ்விடத்தில் யார் இருந்தாலும் இதே நிலைக்குத்தான் தள்ளப்படுவர்.
இதில் ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் கூறவேண்டும் இவ் விடயமானது, கிழக்கிலுள்ள பெரும்பலான தமிழ், முஸ்லிம்களுக்கு சரளமாக சிங்களம் பேச, எழுத முடியாது. அவர்கள் தொழில் ரீதியிலும், ஏனைய கல்விசார் நடவடிக்கைகளிலுமே சிங்கள மொழியை அறிந்து வைத்திருக்கின்றனர். உதாரணமாக கூறினால், ஒருவரிடம் ஏதாவது ஒரு விசாரணையின்போது சொந்த மொழியில் பேசும் போதே எவ்வளவு தடுமாறுகிறார்கள், சுமார் 30 இற்கு மேற்பட்ட மாற்று இனத்தினர் சூழ்ந்துள்ள நிலையில் அவருக்கு எவ்வாறு இருந்திருக்கும்.
இவரின் வாக்குமூலம் மட்டுமல்லாமல் அதே கடையில் பல வருடங்களாக பணிபுரிந்த சிங்கள சகோதரர் தன்னுடைய வாக்குமூலத்தினையும் சமூக வலைத்தளங்களினூடாக பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிடும்போதும், அன்றிரவு நடைபெற்ற சம்பவம் நடைமுறைக்கு
சாத்தியமற்றதே, நாங்கள் சமைக்கும்போது தூள்கள், சுவையூட்டிகள் சேர்ப்பது வழமை, அதே போல் கறியை பதப்படுத்துவதற்காக கோதுமை மாவு சேர்ப்
பது வழமை அதனையே அவர் இவ்வாறு பூதாகரமாக்கியுள்ளார் என்று கூறினார்.
ஆகவே, இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது இங்கு சுமத்தப்பட்ட கருத்தடை மாத்திரை கலக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பது ஊர்ஜிதமாகின்றது. சரி அவ்வாறு பிரச்சினை ஏற்படுத்துவதாக இருந்தால் ஹேட்டல், ஹேட்டல் முதலாளியை சட்ட ரீதியான நடவடிக்கைக்கு எடுத்துச் சென்றிருறிக்கலாம். அதை விட்டுவிட்டு அந்தக் கடைக்கு தொலைவிலுள்ள பள்ளிவாசலையும், பள்ளிவாசல் முன்னாலிருந்த ஹோட்டலையும் இவர்கள் ஏன் தாக்கவேண்டும்?
இதேநேரம் சம்பவம் இடம்பெற்ற அதேநாள் காலையில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸம் ஸ்தலத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்குசென்று நிலைமைகளை அவதானித்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கும் வேளையில் அங்கு நின்ற சிலர் பொலிஸார் முன்னிலையிலேயே பிரதியமைச்சரை தாக்கமுற்பட்ட நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இது இவ்வாறு இருக்கும் நிலையில் மறுநாள் செவ்வாயன்று அமைச்சரவையும் இடம்பெற்றது அதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கிம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் மிகவும் ஆவேசமாகவும் கடுமையாகவும் நிகழ்வை கண்டித்து அமைச்சரவையில் உரையாற்றினர். அத்துடன் சம்மந்தப்பட்ட நபர்களை உடன் கைது செய்யுமாறும், பாதிக்கப்பட்டோருக்கான நஷ்டஈடு ஏற்பாடுகளை செய்துதருமாறும் வேண்டிக்கொண்டனர். இதேவேளை அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயாகமகே ஆகியோரும் சம்பவத்தைக் கண்டித்துப் பேசினர்.
இடம்பெற்ற சம்பவம் குறித்து சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ண அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்,
அம்பாறையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
"நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் வேண்டுமென்றே சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும் நாம் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
அதேநேரம் முஸ்லிம் உணவகங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக ஒரு செய்தி உலாவுகின்றது. எம்மைப் பொறுத்தவரை அது முற்றிலும் பொய்யான தகவலாகும். முஸ்லிம் உணவகங்களில் சிங்களவர் மட்டுமன்றி தமிழர் மற்றும் முஸ்லிம்களும்தான் உண்கிறார்கள்.
அதேநேரம் ஆண்களுக்கு உணவில் கருத்தடை மாத்திரை கலந்துதான் என்ன பயன் உள்ளது? இதனைப் பெண்களுக்குத்தானே கொடுக்கவேண்டும். ஆனால் இதுவரை அப்படியொரு முறைப்பாடு எமக்கு கிடைக்கவில்லை. அம்பாறை உணவகத்தில் மாத்திரை கலக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படின் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் நாம் தயாராகவே இருக்கிறோம்''.
எனவே இவற்றையெல்லாம் வைத்து நோக்கும்போது இந்த செயற்பாடு இனநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இனவாத சூத்திரதாரர்கள் திட்டமிட்டே ஏற்படுத்திய காரணம் என்பதும் அதேவேளை இவர்கள் திட்டப்படி இந்த காரணம் யதார்த்தத்திற்கு முற்றிலும் வேறுபட்டது என்பதே சுருக்கமாகும்.
இங்கு மனவேதனை தரும் விடயம் என்னவென்றால் இவ்வாறான ஒரு நாசகார செயல் இடம்பெற்று பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், இந்த வன்முறையை ஓரிரு ஊடகங்களை தவிர ஏனைய ஊடகங்கள் அலட்டிக்கொள்ளவில்லை.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேற்றை தொடர்ந்து ஆட்சியில் வீழ்ச்சி வருமா? அல்லது தொடர்ந்து நல்லாட்சி செயற்படுமா? என்கின்ற விடயத்துக்கு அனைத்து ஊடகங்களும் மணிக்கொருமுறை அலசிக்கொண்டிருந்தது.
ஆனால், இந்த விடயத்தை சாதõரணமாக செய்திப்பார்வையில் ஒரு அங்கமாக அலசிவிட்டு அமைதியடைந்துவிட்டது. அது மாத்திரமல்ல, இன்று நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் முக்கியத்துவம் தேர்தல் கால வாக்குகளில் மட்டுமே தங்கியிருக்கின்றது போன்று எண்ணத்தோன்றுகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின்போது 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடாத்தப்பட்ட அளுத்கமை தாக்குதல் சம்பவம் அதனோடு, அதற்கு முன்னரும் முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபார ஸ்தலங்கள் எரித்து நாசமாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் அதிருப்தியடைந்த முஸ்லிம்கள் நாட்டில் நிம்மதி, சந்தோசம், சமாதானம் தேவை என்ற ஒரேஒரு காரணத்தினாலேதான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை தெரிவு செய்தனர்.
ஆனால், இவ்வாறு ஒட்டுமொத்தமாக வாக்களித்து இந்த நல்லாட்சியை தோற்றுவித்தமை சிறுபான்மையினருக்கு கிடைத்த தோல்வியாகவே இங்கு கருத வேண்டும். ஏனென்றால், தற்போது அம்பாறையில் நடைபெற்ற சம்பவம் மாத்திரமல்ல இதுவரையில் அதாவது நல்லாட்சி ஆரம்பித்த 3 வருடங்களில் சுமார் 100இற்கு மேற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதிலும் குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற கிந்தொட்டை கலவரம் சரியான தீர்வு இதுவரையில் வழங்கப்படவில்லை, அதேபோல் 2016 ஆண்டு ஒக்டோபர் மாதம் இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி புத்தர் சிலை விவாகரம், 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தெஹிவளை பாத்தியா மாவத்தை பள்ளிவிவகாரம் இதுபோல் இன்னும் பல. அத்தோடு இக் காலகட்டத்தில் பல முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் எரித்து நாசமாக்கி சேதமாக்கப்பட்டது. ஆனால் அவற்றுக்கெல்லாம் கிடைக்கப்பெற்ற ரிபோட் தொழில்நுட்ப கோளாறுகளே!.
இப்படியான நிலைமைகளை உற்றுநோக்கும் இந் நல்லாட்சியில் சிறுபான்மைக்கு சரியான நீதியும், பாதுகாப்பும் வழங்கப்படுகின்றதா என்பது கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயம். அத்தோடு எமது முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நல்லாட்சியின் பங்காளர்களாக இருந்தும்கூட இவ்வாறான நிலைமை ஏற்படுகின்றதென்றால், வெறும் அறிக்கைகள் மூலம் வீரம் பேசுவதை தவிர்த்து, தங்களது பதவிகளை துறந்து அரசைவிட்டு வெளிநடப்பு செய்வது போன்ற எடுத்துக்காட்டான விடயங்களை மேற்கொள்வார்களா?
இந்நிலைமை இன்னும் தொடருமானால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் சிரியா, மியன்மார் போன்ற நிலைமைகளுக்கு தள்ளப்படுவார்களா? எனும் ஐயம் எழுகின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் கிழக்கு மாகாணம் என்பது முஸ்லிம்கள் கணிசமாக வாழுகின்ற ஒரு பகுதி, அதிலும் அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அம்பாறை நகரத்தை பொறுத்தவரையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் அங்குள்ள அரச காரியாலயங்களில் கணிசமானளவு முஸ்லிம்கள் பணிபுரிகின்றனர்.
அங்குள்ள ஏனைய சக மாற்றுமத ஊழியர்களுடன் எந்தவித மனக்கசப்புமின்றி சகோதரத்துடன் பழகிவருகின்றனர், அத்துடன் தங்களது மத கடமைகளையும் இதுவரை காலமும் அந்தப் பள்ளயினுள் மேற்கொண்டுவந்தனர். எனவே, நிலைமை இவ்வாறு இருக்கையில் ஒரு சில இனவாத விஷமிகளால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை உடன் கைது செய்து தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலமே மக்கள் திருப்தியடைவர். இவ்வாறான நிலைமைகளில் சட்டமும், ஒழுங்கும் வாய்மூடி மௌனித்து இருப்பது சிறுபான்மையினர் மத்தியில் இந் நல்லாட்சியின் மீதான தப்பான அபிப்பிரõயத்தை மேலும் வலுவடையச்செய்யும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இதே நேரம் இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் ஸ்தலத்திற்கே எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் உடனடியாக விரைந்த பிரதியமைச்சர் ஹரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான மன்சூர், நஸீர் ஆகியோரும் இந்த விடயத்தை ஜனதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதத்திலும் கூட சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமை பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என திட்டவட்டமாகவும், உருக்கமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு மறுநாள் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் றிஷாத் மற்றும் பிரதி யமைச்சர் அமீரலி உள்ளிட்ட குழுவினர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வனிகசிங்க மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் மெதசிங்க ஆகியோருடன் உயர்மட்டக் கூட்டமொன்றை நடாத்தி அந்தப் பிரதேசத்திற்கு பாதுப்பு சோதனைச் சாவடி அமைத்தல் மற்றும் சேதமாக்கப்பட்ட உடமைகளுக்கான நடவடிக்கைகள் போன்றன முன்வைக்கப்பட்டன.
அதே நேரம், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் நேரடிப் பேச்சொன்றை நடாத்தி இதனை ஆராய்ந்தனர். இங்கு குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயம் என்னவென்றால், இதுவரையில் இடம்பெற்ற பல வன்முறைச் சம்பவங்கள் இதேபோல் ஒவ்வொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், அமைச்சர்களாலும் நாடாளுமன்றிலும், ஊடக அறிக்கைகளிலும் குரல் கொடுத்ததோடு சம்பவங்களும் காலப்போக்கில் மூடிமறைக்கப்பட்டு சங்கிலித்தொடராக சில நாட்களுக்களுப்பின் அடுத்தடுத்த பகுதிகளில் ஊடுருவுவது இலங்கையில் எழுந்துள்ள புதுவகை நோயாகவே உள்ளது.
எனவே, இந்த விடயத்தை கருத்தில் கொண்ட அரசியல் தலைமைகள் இவற்றுக்கான சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் முன்னின்று செயற்படவேண்டும் என்பதுடன், இவ்வாறான அசாதõரண சூழ்நிலைகளில் சிறுபான்மை இன மக்காளகிய நாமும் மிகவும் நிதானத்துடன், சாதுவாகவும் பயணிக்க வேண்டும். அத்துடன் இந்நாடு நான்கு மதமும் வாழுகின்ற ஒரு நாடு என்பதால் இன ஒற்றுமையிலும் சமத்துவத்திலும் அரசு கடுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பது எதிர்கால சந்ததியினருக்கு இன்றியமையாத விடயம் என்பதையும் இந்தக் கட்டுரை உணர்த்தும்.