தகவல் - லோகநாதன் பீ.எஸ்.
கொளுத்தும் மத்தியான வெயில். கொள்ளுப்பிட்டியின் ஒரு பக்கமாக இருந்து நடந்து வந்து கொண்டிருக்கிறேன்.
"ஐயா......,!" - கொஞ்சம் சன்னமான குரல் கேட்டு சட்டெனத் திரும்பினால்.....,
முதுமைத் திரை கோடிட்ட சோக முகம் , தளர்ந்த உடலோடு தள்ளாட்டத்துடனான நடையோடு ஒரு முதியவர்.
என்னையறியாமல் என் நடை நின்று போக, அவரை நோக்கித் திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்து நெருங்குகிறேன்.
"என்ன?" என்ற என் முகபாவத்தைப் பார்த்ததும் பேசத் தொடங்குகிறார். தன் இளமைக் கால வாழ்க்கை, திருமணம், குழந்தைகள் முதல் வாழ்வின் மகிழ்ச்சிகரமான மலரும் நினைவுகள் வார்த்தைகளாய், சம்பவங்களாய் வந்து விழுகின்றன.
நிறுத்திப் பெருமூச்சு விட்டபின் தொடர்கிறார்.
"ஐயா, நான் பிச்சை எடுப்பவன் அல்ல. என் குழந்தைகளைப் படிக்க வைத்து, நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்து அவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்தேன். ஆனால் எல்லோருக்கும் நான் பாரமாகிப் போனதால் கைவிட்டு விட்டார்கள். நல்ல வேளை, என் மனைவி இந்தக் கோலத்தைப் பார்க்காமல் சில வருடங்களுக்கு முன் கண்ணை மூடி விட்டாள். எனக்கும் போய்விடத்தான் ஆசை. ஆனால் சாவும் வராமல், வாழவும் முடியாமல் நடுத் தெருவுக்கு வந்து விட்டேன் ஐயா.
சிறிய வயதிலே நான் பழகிய ஒரு நண்பர் அவர் வீட்டிலே தங்க இடம் தந்திருக்கிறார். உணவும் தருகிறார்கள். ஆனால் மனம் கேட்காமல் வெளியிலே வந்து, சிலருடைய முகங்களைப் பார்த்ததும் ஏதாவது உதவி கேட்பேன். கிடைப்பதை சேமித்து வைத்திருக்கிறேன். ஒருநாள் என் உயிர் பிரிந்ததும் என் நண்பருக்கு என் அடக்கத்திற்காவது இந்தப் பணம் உதவியாக இருக்குமல்லவா?"
பேசி முடிக்கிறார். என் கண்களை மறைத்த கண்ணீர் திரண்டு வர, "நீங்க ஏன் ஐயா......?" என்னைப் பார்த்துக் கேட்கிறார்.
பேச்சற்றுப் போன என் மனதிலே ஏதேதோ எண்ணங்கள், கோபம், ஆதங்கம் - எல்லாவற்றிற்கும் மேலாக நெஞ்சை அழுத்தும் துக்கம்.
"சே, என்ன வாழ்க்கை இது? நன்றி கெட்ட உலகம் இது?" - என் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?
"உங்க பிள்ளைங்க எங்கே இருக்காங்க? சொல்லுங்க நான் அவங்களோட பேசறேன்"
"வேணாம் ஐயா, அவங்க சந்தோஷமா இருக்கட்டும். மறுபடி அங்கே போய் அவங்கள சங்கடப்படுத்த நான் விரும்பலே"
இறைவா, தன்னைக் கைவிட்ட நிலையிலும் பிள்ளைகளின் மகிழ்ச்சியையே நினைக்கும் இந்தப் பெரியவரைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். என் தகுதிக்கு சற்று அதிகமான தொகையைத் தருகிறேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர் என்னைக் கும்பிட்ட பின் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறார்.
கோழையாகி நிற்கும் என்னால் அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. கைத்தாங்கலாக பிரதான சாலைக்கு அழைத்து வந்து, அவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்ப முற்படுகிறேன். "வேணாம் ஐயா, பஸ்லேயே போய்டுவேன்" என்கிறார்.
பஸ்ஸில் ஏற்றிவிடுகிறேன். பஸ்ஸுக்குள் இருந்து கும்பிடுகிறார். நானும் கண்ணீரோடு......., கண்களிலிருந்து பஸ் ஓடி மறையும்வரை கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டே நிற்கிறேன்.
"பிள்ளை என்னும் பந்த பாசத்தைத் தள்ளி
பிரிந்தோடும்
தன் உள்ளத்தை இரும்புப் பெட்டகமாக்கித்
தாள் போடும்
இல்லாதவர் எவரான போதிலும்
எள்ளி நகையாடும்
இணை இல்லாத அன்னை
அன்புக்குக் கூட
சொல்லால் தடை போடும்"
பந்தம், பாசம், அன்பு எல்லாமே மாயைதானா? அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
குறிப்பு - தயவு செய்து இதனைப் படிக்கின்ற யாராகினும் உங்கள் பெற்றோருக்கு அநியாயம் செய்யாதீர்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்...நீங்கள் அவர்களுக்கு அநியாயம் செய்வது எவ்வளவு நன்றி கெட்ட தனம் தெரியுமா.
குறிப்பு - தயவு செய்து இதனைப் படிக்கின்ற யாராகினும் உங்கள் பெற்றோருக்கு அநியாயம் செய்யாதீர்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்...நீங்கள் அவர்களுக்கு அநியாயம் செய்வது எவ்வளவு நன்றி கெட்ட தனம் தெரியுமா.