Ads Area

நம்மால் முகநூல் வாயிலாக பேசப்பட்ட அவதூறுகளின் விலை என்ன..??

ஒரு விஷயம் கிடச்சிட்டா போதுமே சும்மா வச்சி செய்வானுங்க நம்ம பசங்க! இது நமது சமூகத்துக்கு இயல்பாகிடிச்சு அதாவது தற்போது முகநூலில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் முஸ்லிம் இளைஞர், யுவதிகள் சிலரின் செயற்பாடுகள் குறித்து இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.

இக் கட்டுரையின் நோக்கம் அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு சாதகமாக பேசுவதோ அல்லது தற்கால பிரச்சினையை மட்டும் மையாக வைத்தோ அல்ல. இது எக் காலத்துக்கும் பொருத்தமாக அமையக் கூடிய கட்டுரையாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாகும், என்பதை இவ்விடத்தில் தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

எமது நாடு 4 மதத்தவர்கள் வாழ்கின்ற நாடு. இந்நாட்டில் குறிப்பிட்ட மதம் என்று பிரிவினையோடு செயற்படுவது முழுமையாக கடினம் இருந்தலும் எமது மார்க்கத்தை முற்றுமுழுதாக துறந்து நடப்பதும் தவறு. அத்துடன் மாற்றுமத சகோதரர்களுடன் நாம் சகோதரத்துவமாக இருக்க வேண்டியது நம் அனைவரினதும் தலையாய கடமை. அதற்காக சோசலிசம் என்கின்ற போர்வையில் சோனியென்பதை மறந்து நடப்பதும் குற்றம்தான்.

இது ஒரு புறமிருக்க இங்கு பேசுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த யுவதிகளை முகநூல் வாயிலாக பலரும் விமர்சனங்களால் விலாசித்தள்ளுகின்றனர். நாம் ஒரு விடயத்தை சிந்திக்க வேண்டும் இன்று இவ்வாறு இடம்பெற்ற மார்க்கத்துக்கு முரணான பண்டிகைக் கொண்டாட்டம், சம்பிரதாயம், மதம் எல்லாம் மறந்து ஆடுகிறார்கள் என பேஸ்புக் முழுக்க ஆடுகின்றதே!. இவற்றை விமர்சிக்கும் நாம் அனைவரும் உண்மையில் அந்நியப் பெண்களிடம் பக்குவமாய் இருக்கின்றோமா? என்று கட்டாயம் ஒவ்வொருவர் உள் மனதிலும் கை வைத்து கேட்க வேண்டும்.

அவ்வாறு முஹாசபா செய்வோமேயானால் அது நிச்சமயமாக பெரும்பாலும் சிந்திக்க வேண்டிய விடயமாகவே இருக்கும். ‘ஓடையில தண்ணீர் ஓடுதாம் னு நானும் காலை நலச்சிட்டு வாரன்’ என்கின்ற கதையாக இருக்கின்றது நம் சமூகத்தினரின் விமர்சனங்கள். அந்த நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பண்டிகை சிறப்பு நிகழ்வு புகைப்படங்கள் முகநூலில் பதிவேற்றப்பட்டதால் வெளியான சம்பவம் என்தாலேயேதான் இவ்வளவு பூதாகரமாக இந்த விடயம் ஊதிப்பெருக்கின்றது. ஒன்றை சிந்தியுங்கள் இதைவிட கொடூரமான நிகழ்வுகள் எத்தனையோ வெளிவராத நிலையில் எமது யுவதிகளும், இளைஞர்களும் சீர்கேட்டில் இருக்கின்றனர்.

அந்த யுவதிகளை வாய் கூசாமல் பேசுகின்ற எத்தனை பேரின் சகோதரிகள் வெளி இடங்களில் தொழில், கல்வி என்று செல்லாமல் வீட்டுக்குள் இருக்கின்றனர். சந்தர்ப்பம் எந்த நேரமும் யாரையும் பலிக்கேடாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதற்கு உதாரணமாக ஹதீஸ_ம் இருக்கின்றது. அதாவது “ஆண், பெண் இருவர் தனித்து இருக்கும் சந்தர்ப்பத்தில் மூன்றாம் நபராக ஷைத்தான் நுழைகின்றான்”  அந்த யுவதிகள் மார்க்கத்தில் பலவீனமாக இருக்கலாம் அல்லது மார்க்க அறிவே இல்லமால் லேபல் முஸ்லிமாக இருக்கலாம் இருந்தபோதிலும் ஹிதாயதும், ழலாழதும் கொடுப்பவன் இறைவனையன்றி வேறு யாரும் இல்லை. இச் சம்பவத்தின் பின்னர் ஏதோ ஒரு வகையில் இறைவன் அந்த யுவதிகளுக்கு ஹிதாயத் கொடுக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், நம்மால் முகநூல் வாயிலாக பேசப்பட்ட அவதூறுகளின் விலை என்ன (மறுமையில்)? சிந்தித்தோமா?


சரி, இந்த விமர்சகர்கள் சமூக நோக்கத்துக்காக இவ்வாறு செய்தார்கள் என நோக்கினால் இதை பாலூன் என்ற வசனத்தால் இரட்டை மொழியின் (Double Meaning) ஊதிப் பெரிதாக்கிய சகோதரர்களில் யாராவது ஒருவர் சம்பந்தப்பட்ட யுவதிகளை தனிப்பட்ட ரீதியில் அனுகி நல்லுபதேசங்கள் வழங்கியிருக்கலாம் தானே! மாறாக விமர்சனங்கள் விலாசித்தள்ளத் தேவையில்லையே!

ஏன் இவ்வாறு குறுகிய சிந்தனை கொண்டு, நல்லது செய்கின்றோம் என்கின்ற போர்வையில் நாடகமும், நடிப்பு வாசகங்களும். இவ்வாறு இடம்பெற்ற நிகழ்வு பிழையாக இருக்கின்றமையை உணரும் நாம் அனைவரும் இதை ஒரு படிப்பினையாகக் கொண்டு எமது சமூகத்தில் இனிமேல் இவ்வாறு இடம்பெறாத வண்ணம் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அறிவூர்வமாண தெளிவூட்டல்களை வழங்குவதே சாலச் சிறந்தது.


அது மாத்திரமல்லாது தலைநகரம் உட்பட அனைத்து ஊர் உலமா சபைகளும் இவ்வாறான கலப்பு ரீதியிலான வைபவங்கள் விழாக்களில் எமது பக்குவங்களை எவ்வாறு பேணவேண்டும் என்பதில் கடுமையாக இருக்க வேண்டும். 

அனாச்சாரங்கள் தலைதூக்கும் சந்தர்ப்பங்களில் வெறும் விமர்சனங்கள். அதன் பின்னர் விமர்சிக்கப்பட்டவர்கள் கண்டுகொள்ளமல் விடப்படுவர், பின்னர் யாரெல்லாம் சமூகங்களால் விமர்சிக்கப்பட்டார்களோ அவர்கள் ஏதும் பட்டங்கள் முடித்துவிட்டால் அவர்களின் அனைத்து ஊழல்களும் மறைந்து சமூகத் தலைவர்களாக மாறிவிடுகின்றனர்.


அவ்வாறில்லை பண்பாடும், ஒழுக்கமுமில்லாதவர்கள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டால் ஊர் நிர்வாகக் கட்டமைப்புக்கள் தகுந்த தண்டனையை வழங்கி. அவர்கள் இலங்கையின் அதியுயர் கல்வித் தகைமையைப் பெற்றாலும் கண்டுகொள்ளமல் விடுமிடத்து ஒவ்வொருவரும் மார்க்கப்பற்றுடன் சமூகத்தில் நற்பெயர் இருக்கவேண்டுமென்பதற்காகவே மார்க்கத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்வர்.

செக்கனுக்கு செக்கன் பதிவுகளும், விமர்சனங்களும் ஏராளம் பேசுகின்றபோது சிந்திக்க வேண்டும் நாம் சரியாக நடந்தோமா? நடக்கின்றோமா? என்று. வெறும் வெட்டிப்பேச்சுகளுக்காகவும் பேஸ்புக்கில் டிரெண்டாகும் லைக், கொமண்ட்ஸ் அதிகம் கிடைக்கும் என்று பதிவிடமால் சற்று சிந்திந்து சில விடயங்களில் செயற்படுவதே ஆரோக்கியமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

- கியாஸ் ஏ. புஹாரி
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe