நமது நாட்டில் கடன் சுமை தொடர்ந்தால் சீனா இந்தியா போன்ற நாடுகளினால் இயற்றப்படும் சட்டங்களை இலங்கையின் தேசிய கொள்கைகளாக நடைமுறைப்படுத்தும் நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரத்துக்கு என சீன நிறுனத்திடம் இருந்து பணம் பெற்றமை குறித்து நியூயோர்க் டைம்ஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுப் பற்றி சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை முன்வைத்தார்.
தேர்தலுக்கு ஒரு சாரார் சீனாவிடம் இருந்து பணம் பெறும் நிலையில் மற்றுமொரு சாரார் இந்தியாவிடமிருந்து பணம் பெறும் நிலை காணப்படுகின்றது. நாடு பின்பற்றும் முறையில் காணப்படும் குறைபாடே இதற்குப் பிரதான காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாரிய கடன் சுமையுடன்தான் நாட்டை ஆளவேண்டிய நிலை தொடர்ந்தால் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் முகவர்களாக இருந்து கொண்டு அவர்களால் இயற்றப்படும் சட்டங்களை எமது தேசிய கொள்கைகளாக பின்பற்ற வேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் பொருளாதார நிலைமைகளை சீர்செய்ய வேண்டிய நிலை காணப்படுவதுடன் வடக்கு-கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான இளைஞர்-யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.