சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் 46 பேர் இன்று (14) பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற செய்தி எனது கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தது.
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், கிழக்கு மாகாண ஆளுநரினால் புதிதாக மூவருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனங்களைக் கண்டித்தே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
கிழக்கு மாகாணத்தின் பல உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக, நீண்டகாலமாக பல நூறு ஊழியர்கள் பணியாற்றிவரும் நிலையில் அவர்களுக்கு விமோசனங்களை வழங்காமல் கிழக்கு மாகாண ஆளுநரின் வரம்பு மீறிய இந்தச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தங்களது அன்றையக் கடமைகளை முழு நாள் அல்லது அரை நாள் பகிஷ்கரித்த நிலையிலேயே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
ஆனால், சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தப்படக் கூடாது என்பதற்காக இன்றைய (14) தினத்துக்கான தங்களுக்கான அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து, அதுவும் தமது கடமை நேரம் நிறைவடைந்த பின்னரே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை எனது கவனத்தை ஈர்த்து மனதை நெகிழச் செய்தது.
பல வருடங்களாகத் தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்காத மிகப் பெரும் வேதனையை ஒரு புறம் சுமந்த நிலையிலும் மறுபுறும் கிழக்கு ஆளுநரால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட மூவரின் வருகை என்ற இன்னொரு பேரிடியான செய்திக்கு மத்தியிலும் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என்று தெருவுக்கு இறங்காமல் மக்கள் பணியே தம் முதல் பணியாகக் கருதிய அந்த ஊழியர்களின் மன நிலமையை என்னவென்று வர்ணிப்பது?
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திண்மக் கழிவகற்றும் பணியாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாள தோழர்களும் தங்களது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிய பின்னரே கவனயீர்ப்புப் போராட்டத்தில் அமைதியாக ஈடுபட்டுள்ளனர். அந்த தொழிலாளர் வர்க்கத்தின் கைகளையும் கால்களையும் பன்னீரால் கழுவ வேண்டுமென்ற ஆதங்கம் என் மனதில் தோன்றியது.
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். நான்கு மணிக்கு முடிவெடுத்து 5 மணிக்கு போராட்டமும் ஆரப்பாட்டமும் நடத்தும் நிலைமையே இந்த நாட்டில் இன்று காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இவ்வாறான போராட்டக்கார்கள் சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களிடம் சென்று ஒரு போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்பது தொடர்பில் பாடம் படிக்க வேண்டும்.
இதேவேளை, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், ஏ.எம்.எம். செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மத் ஆகியோர் தங்களது ஊழியர்களின் மனநிலைமையைப் புரிந்து செயற்பட்டமை மிகச் சிறப்பான விடயம். விசேடமாக, தவிசாளர் நௌஷாத் அவர்கள் ஊழியர்களுடன் பழகும் நெருக்கமான தன்மைகளும் பாராட்டப்பட வேண்டியவைகளே!
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

