ஹுதா உமர்.
சம்மாந்துறையின் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், நுால் ஆய்வுகளில் ஈடுபடுதல், எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல், சம்மாந்துறையின் வரலாறோடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை நோக்காக கொண்டு ஒன்பதாவது “குயிலோசை இலக்கிய ஒன்றுகூடல்” இன்று சம்மாந்துறை மத்திய கல்லுாரி ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.
எழுத்தாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளருமான மன்சூர் ஏ காதிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்
கிழக்கு மாகாணம்,கிண்ணியாவை சேர்ந்த கவிஞர் ஏ.நஸ்புல்லாவின் "நஸ்புல்லாஹ் கவிதைகள்" எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வரவேற்புறையை கவிஞர் ஜெமீல் நிகழ்த்தினார்,தலைமையுரை நிகழ்த்திய நிகழ்வின் தலைமை மன்சூர் ஏ காதிர் அவர்கள் நூலாசிரியரின் கடந்த கால படைப்புகள் பற்றி பேசியதுடன் சுவாமி விபுலானந்த அடிகளாரினதும், பிராந்திய கவிஞர்கள் நிகழ்த்திய தமிழ் சாதனைகள் பற்றி எடுத்துரைத்தார்.
தே. கி.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அம்ரிதா (ஏ.எம். றியாஸ்) அவர்கள் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பிராந்திய கலாச்சாரங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் இன்றைய தினம் வெளியாகும் குறித்த புத்தகத்தில் உள்ள சில சருக்கள் பற்றியும் தனது உரையில் பேசினார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கவிஞர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் (அலறி) அவர்கள் முதல்பிரதியை பெற்றுக்கொண்டார் கவிஞர் சோலைக்கிளி,கவிஞர் விஜிலி,எழுத்தாளர் நவாஸ் சௌபி,என பல கவிஞர்,எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







