ஆட்டுக்கறியை நாய்க்கறியாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கொதிக்கிறார் த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து கடந்த 17-ம் தேதி சென்னை எழும்பூருக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி கொண்டு வரப்பட்டது. தெர்மாகோல் பாக்ஸில் அடைக்கப்பட்டிருந்த இந்த இறைச்சி குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் சென்றது. அந்த பாக்ஸ்களைப் பிரித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இவை அனைத்தும் ஆட்டு இறைச்சி அல்ல, நாய்க்கறி என்ற தகவல் பரவியது. இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த இறைச்சி விற்பனையாளர்கள் சங்கமும், `எந்தவித ஆய்வும் நடத்தாமல் அதை நாய்க்கறி என்று எப்படி உறுதிப்படுத்தமுடியும்’ எனக் கொந்தளித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, ` அதிகாரிகளிடம் பிடிபட்டது அனைத்துமே ஆட்டுக்கறிதான். ராஜஸ்தானில் காணப்படும் வெள்ளாடுகளின் வால்கள் ஓர் அடி வரையில் வளரக்கூடியவையாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள ஆடுகளின் வால்கள் மிகவும் சிறியதாக இருக்கும். விலை குறைவு என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்த நீளமான வால்களை உடைய ஆட்டுக்கறியை இங்குள்ள வியாபாரிகள் வாங்குகின்றனர். அதைச் சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருக்கும் ரயில்வே அதிகாரிகள் இந்த இறைச்சியைப் பார்த்துவிட்டு, எந்த ஆய்வும் செய்யாமல் ‘நாய்க்கறி’ என்று வதந்தி பரப்பியுள்ளனர். முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்த வதந்தி பரவியதன் காரணமாக சென்னையில் ஆட்டுக்கறி விற்பனை செய்வோரும் பிரியாணி வியாபாரம் செய்வோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இறைச்சி வியாபாரிகளும் ஓட்டல் உரிமையாளர்களும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வதந்திக்குக் காரணமான ரயில்வே அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார்.
ஹைதர் அலியிடம் பேசினோம். `` ஜோத்பூர் ஆடுகள் ஆரோக்கியமானவை. அதன் கறியும் சுவையாக இருக்கும். அந்த ஆடுகளின் வால் கொஞ்சம் நீளமானதாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் இங்குள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும் இந்த ஆடுகள்தான் சப்ளை செய்யப்படுகின்றன. இங்கு 500 ரூபாய்க்கு விற்கப்படும் கறியானது அங்கு 300 ரூபாய்க்குக் கிடைக்கிறது. வட மாநிலங்களுக்குச் சென்றாலே கறிகளின் விலை குறைவுதான். ஜோத்பூரிலிருந்து ஆடுகளும் இங்கு வருகின்றன. ஓட்டலுக்கு சப்ளை செய்கிறவர்கள், அங்கேயே வெட்டிக் கொண்டு வருகின்றனர். கறியைக் கொண்டு வருவதில் ஆரோக்கியக் கேடு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதைவிடுத்து ஆட்டையே நாய்க்கறியாக மாற்றிவிட்டனர். இப்போது, நாங்கள் அப்படிச் சொல்லவில்லை என்கிறார்கள். ரயிலில் வந்தது நாய்க்கறியாக இருந்தால், வியாபாரிகள் மறியல் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே?’ எனக் கொந்தளித்தார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய அதிகாரிகளால் இந்த வதந்தி பரப்பப்பட்டு அது பல இணையத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வந்தது, எங்களது சம்மாந்துறை24 இணையமும் அதனை பகிர்ந்திருந்தது இதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு அதன் உண்மையான செய்தியினை தெரிவிப்பதும் எங்களது கடமை என்ற ரீதியில் இச் செய்தியினை வெளியிடுகின்றோம்.
Thanks - Vikatan