சம்மாந்துறை உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவத்தின் HNDE பாடநெறி மாணவர்களின் கற்றல் நடவடிக்கையில் ஏற்பட்டிருந்த கட்டிட இடைநிறுத்தல் விவகாரம் உடனடித் தீர்வினை எட்டியுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகையின் கீழுள்ள சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதியிலுள்ள கட்டிடமொன்றில் குறித்த பாடநெறி பல மாதங்களாக இடம்பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென பூட்டு இடப்பட்ட சம்பவம் ஒன்றினை சம்மாந்துறை ‘நியூஸ் பிளஸ்’ செய்திச் சேவை வெளிக் கொண்டுவந்தது.
இதனடிப்படையில் இவ்விடயம் சம்பந்தமான முழு விபர கட்டுரையினையும் நேற்றைய தினம் நியூஸ்பிளஸ் வழங்கியருந்தது.
அந்த வகையில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கும் – SLIATE இன் உயர் அதிகாரிகளுக்குமிடையில் (26) காலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இவ்விடயம் சுமூகமான முறையில் தீர்வுகானப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.
அதாவது, அம்பாறை SLIATE இல் உள்ள உயர் அதிகாரியை நேரில் சென்று குறித்த விடயம் சம்பந்தமாக உரையாடிய பின்னர் தனது தனிப்பட்ட முடிவின் பிரகாரம் உடன் செயற்பாட்டுக்கு வரும் வகையில் படநெறிக்கான இடத்தை வழங்கும்படி அவசர அணுமதியினை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.
இவ் விடயம் குறித்து தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாடிடம் வினவியபோது அவர் தெரிவித்தாவது,
“ஒரு சில நிர்வாகத்தினரின் பொடுபோக்குகளால் சமூகம் பாதிப்படைவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது சம்மாந்துறை SLIATE நிறுவன நிர்வாகத்தினரின் பொடுபோக்கின் காரணமாக எவ்வித சட்ட ரீதியான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படாமையினால் எழுந்த பிரச்சினை.
இதில் எவ்வித அரசியலும் இல்லை. குறிப்பாக இது கல்வியுடனான விடயம் என்பதால் சங்கடத்திற்கு மத்தியில்தான் நாங்களும் தடுப்புக் கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால், இது அந் நிறுவாகத்தினரின் விழிகளை இப்பொழுதான் தட்டியெழுப்பியுள்ளது.
எந்த ஒரு அரச நிறுவனமாயினும் ஒவ்வொரு நிறுவனத்திற்குமிடையில் எழுத்து ரீதியிலான தொடர்பாடல் எப்பொழுதும் அவசியம் அதை அவர்கள் செய்யவில்லை. இதன் விளைவாக வந்த வினையே இது!.
இருந்தாலும் மாணவர்களின் கல்வி பாதிப்படைவதில் கவலையுற்ற நிலையில் இன்று காலை நானே நேரில் சென்று அம்பாறையில் உள்ள SLIATE உயர் அதிகாரியை சந்தித்து கலந்துரையாடி அவர்களுடனான ஒப்பத்தின் பிரகாரம் எமது சபையின் கடந்த மாத அமர்வின் தீர்மானத்தையும் தாண்டி என்னுடைய தனிப்பட்ட முடிவின் பிரகாரம் குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் கற்றல் நடவடிக்கைக்கான அனுமதியினை வழங்கியுள்ளேன்” – என்றார்.
தவிசாளரின் கூற்றின் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள சபையின் அடுத்த அமர்வில் முடிவுசெய்யும் வரை மாணவர்களை அவதிப்படுத்தாமலும், மேலும் சபைக் குழப்பங்களையும் கருத்தில் கொள்ளாது தனிப்பட்ட ரீதியில் அவர் அவசரமாக வழங்கிய அனுமதி பாராட்டத்தக்க விடயமே!
இந் நிலையில் வைத்து நோக்கும்போது, இது குறித்த நிறுவன பிராந்திய நிர்வாகத்தினரின் அசமந்த போக்கினாலேயேதான் இப்படியொரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உணரப்படுகின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும், இப்படியான சூழ்நிலைகள் தோற்றுவிக்காமல் சிறப்பாக செயற்பட குறித்த நிர்வாகம் இன்னொரு அரச நிறுவனத்தின் உதவியை நாடும்போது ‘அனுவளவு மண்ணாயினும்’ அதை அலுவலக உத்திகளுக்கமைவாக அனுகுவதே சாலச்சிறந்ததாகும்.
நன்றி - கியாஸ் ஏ புஹாரி (நிவூஸ் பிளஸ்)
https://www.sammanthurai24.com/2018/11/Sammanthurai-SLIATE.html சம்மாந்துறை SLIATE பிரச்சினை தொடர்பான முந்தைய பதிவு.