Ads Area

கல்முனை மாநகர சபையில் மீண்டும் அமளிதுமளி! பாராளுமன்றத்தைப்போல் கல்முனை மாநகரசபை அமர்வும் இழுபறியில்..


(காரைதீவு  நிருபர் சகா)

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு மீண்டும் அமளிதுமளியுடன் முடிவடைந்துள்ளது.

இவ் அமர்வு நேற்றுமுன்தினம்(28) புதன்கிழமை பிற்பகல் மாநகரசபை முதல்வர் எ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்றது.

இலங்கைப்பாராளுமன்றத்தின் அண்மைக்கால அமர்வுகளைப்போல் கல்முனை மாநகரசபை யின் கடந்த சிலஅமர்வுகள் தொடர்ந்து அமளிதுமளியுடன் குழப்பத்திலேயே முடிவடைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

புதனன்று பிற்பகல் அரைமணிநேரம் தாமதித்து 2.30 மணியளவில் ஆரம்பமான அமர்வு சுமார் ஒருமணிநேரம் சுமுகமாகப் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

பின்பு நிதிக்குழு தீர்மானம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. குறித்த பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடவேண்டும் என எதிரணியினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனை மேயர் கணக்கிலெடுக்காமல் வாக்குவாதத்திலீடுபட்டார்.

அதன்போது மேயர் றக்கீப் அந்த தீர்மானம்தான் இறுதிமுடிவு வாக்கெடுப்பிற்கு விடத்தேவையில்லை எனக்கூறி கூட்டத்தை இடைநடுவில் மாலை 5.30மணியளவில் முடித்துவிட்டு ஆசனத்தைவிட்டு வெளியேறினார்.

அதன்போது எதிரணியினர் ஆசனங்களை தூக்கி எறிந்து மேசையிலிருந்த காகிதங்களை வீசினர். சபை குழம்பியது.

ஆளுந்தரப்பினர் 11பேரும் வெளியேற எதிரணியினர் 21பேர் சேர்ந்து ஊடகமாநாட்டை நடாத்தத்தீர்மானித்தனர்.

ஊடகமாநாட்டிற்கு இடைஞ்சல்!

சுமார் 5.40மணியளவில் அதே சபா மண்டபத்தில் எதிரணியினர் 21உறுப்பினர்களும் இணைந்து ஊடகமாநாட்டை நடாத்தத்தொடங்கினர்.

சாய்ந்தமருதைச்சேர்ந்த தோடம்பழச்சின்ன சுயேச்சை அணியினர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் குதிரைச்சின்ன சுயேச்சை மற்றும் கொடிஉறுப்பினரென 21பேர் ஊடகமாநாட்டில் பங்கேற்றனர்.


ஊhடகமாநாடு தொடங்கி சில நிமிடங்களில் அம்மண்டபத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்விசிறிகளும் நிறுத்தப்பட்டன.
எனினும் செல்போன் லைற் வெளிச்சத்துடன் ஊடக மாநாட்டைத் தொடர்ந்தனர்.
 சற்றுநேரத்தில் மேயர் றக்கீப் பொலிசாரை வரவழைத்து எதிரணியினரை மண்டபத்தைவிட்டு வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
பொலிசார் மண்டபத்தினுள் நுழையமுற்பட்டதும் எதிரணியினர் உரத்துக் குரல்எழுப்பினர். ஆதலால் பொலிசார் வெளியே நிற்கநேரிட்டது.
எனினும் மேயர் விடவில்லை. பொலிசாருடன் மேயர் மண்டபத்தினுள் நுழைந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் பொலிசார் அமைதியாகநின்றதனால் அவர்களை வெளியேற்றமுடியவில்லை.

மேயரின் அராஜகம் பற்றி அங்கு எதிரணி உறுப்பினர்கள் கருத்துரைத்தனர்.

எதிரணியினர் கூட்டத்தைமுடித்துவிட்டே வெளியேறினர். அங்கு வெளியே உறுப்பினர்களிடையே சிறு கைகலப்பு இடம்பெற்றதைக் காணக்கூடியதாயிருந்தது.

சுமார் அரைமணிநேரம் இருட்டில் மின்விசிறி இல்லாமல் பலத்த இடைஞ்சலுக்கு மத்தியில் இந்த ஊடகமாநாடு இடம்பெற்றது கல்முனை வரலாற்றில் இடம்பிடித்துள்ளதென கூறப்படுகிறது.

இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் சபை நடாத்தமுடியாத நிலை தோன்றலாம் கூடவே கைகலப்பும் உயிரிழப்பும் இடம்பெறலாமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe