சாக்கீர்.
சம்மாந்துறை! அழகிய கிராமம் மக்களில் மட்டுமல்ல, இறையளித்த இயற்கையின் கொடை களிலுமே. அன்றைய மட்டக்களப்பு (இன்றைய சம்மாந்துறை), அராபிய, இந்திய வெளிநாட்டு வர்தகர்களின் பண்டமாற்று சந்தையாகவும். மத்திய மலைநாட்டு மக்களிற்கான வியாபார பாதையாகவும். தாவளம் முறை வியாபாரம் நடைபெற்ற புராதன செரன்டீப் இனது முக்கிய தலமாகவும் காணப்பட்டது.
இங்குள்ள மக்கள் விவேகத்திலும் வீரத்திலும் விஞ்சியவர்களே. இங்கு முஸ்லிம்களின் உணவுப் பழக்கமும் மிகச்சிறப்பானது. சம்மாந்துறை கல்வி, விவசாயத்தில் மட்டுமன்றி கால்நடை வியாபாரத்திலும் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில்
இங்கு பெரும் மாட்டுப் பண்ணையாளர்களிடம்; இறைச்சி வியாபாரிகளும், புனித வைபவங்களில் தானம் வழங்குபவர்களும் இறைச்சிக்காக மாடு வாங்குவார்கள் இவ்வேளை விலங்குத் தெரிவு முக்கியம் பெறுகிறது.
காலையிலுள்ள மாடுகளுக்கு மத்தியில் மாட்டுக்காரர் நின்று கொண்டு; கயிறொன்றை சுழற்றுவார். அப்போது அங்குள்ள உற்சாகமானதும் ஆரோக்கியமானதுமான மாடுகள் மிரண்டு காலையை விட்டு வெளியேறுவதற்காக சுற்றிச் சுற்றி ஓடும். இவ்வாறு ஓடுகின்ற மாடுகளில், அவற்றில் மிகச்சிறந்த மாட்டையே வியாபாரிகளும், தானம் வழங்குபவர்களும், ஏனையவர்களும் வாங்குவார்கள். ஆரோக்கியமற்றதும், நோய்ப்பட்டதுமான மாடுகளை வாங்கமாட்டார்கள்.
மற்றும் இங்குள்ள கால்நடை விற்பன்னர்களில் மாடுகள் நடந்து செல்லும் போதே அதிலிருந்து பெறக்கூடிய இறைச்சியின் அளவைக் கணிக்க கூடியவர்களும் உள்ளனர். அத்தோடு இவற்றின் பாகங்கள், சுவையானதும் சிறந்ததுமான இறைச்சிப்பகுதிகள் பற்றிய அறிவும் சுவைமிகு இறைச்சி உணவுகளை தயாரிப்பதிலும் விற்பன்னர்களாகவே இருக்கின்றனர்.
“ஓடுற மாட்டில் இறைச்சி எடுத்து தின்பவர்கள்” என்று இகழுரைக்காக சிலர் இங்குள்ள மக்களைப் புகழ்வது முரண்நகையே. கால்நடை வளர்ப்பினில் மாடு வளர்ப்பு என்பது பூர்வீகத்தின் ஆரம்பத்தை தெளிவாய் உணர்த்தும் வாழும் தடயமென்றால்; அதில் குறையில்ல.
தகவல்:- மூத்த கால்நடை வைத்தியர் (காசிம்பாவா இஸ்மாலெப்பை)