Ads Area

சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்ய நான் மைத்திரி போன்று நன்றி கெட்டவன் அல்ல.

நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் இன்று தமிழர்கள் மனதில் 'நன்றிகெட்ட மனிதன்' என்று பதியப்பட்டுள்ளார். எனவே, நானும் தமிழ் மக்களுக்கு நன்றிகெட்டவனாக - ஏமாற்றுக்காரனாக இருக்கமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நான் உறுதியளித்தபடி ஆட்சிப் பொறுப்பை மீள ஏற்றதும் புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன். தமிழர்களுக்கு ஏற்ற - நாட்டின் நலனுக்கேற்ற நிரந்தர அரசியல் தீர்வை வழங்கியே தீருவேன். இது உறுதி"

இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசியல் சாணக்கியம் மிக்கவர்; தீர்க்கதரிசனமான தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்திருந்தாலும் நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு எம்முடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு வருகின்றார். இதனால் அவர் மீதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் தமிழ், சிங்கள இனவாதிகள் கடும் விமர்சனங்களைத் தொடுத்து வருகின்றனர். நல்லதைச் செய்தால் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்குவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பினர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்கள். இதனைப் பொறுக்க முடியாத ராஜபக்ஷ அணியினர் இனவாதக் கருத்துக்களை வெளியிடத் தொடங்கிவிட்டனர். சில ஊடகங்களும் இதற்குத் துணைபோகின்றன என்பதுதான் மனவருத்தம் அளிக்கின்றது.

'தமிழீழம்' மலரப் போகின்றது என்று மஹிந்த ராஜபக்ஷ அணியினர் கூக்குரல் இட்டாலும் நாம் எதையும் பொருட்படுத்தமாட்டோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு புதிய அரசமைப்பை உருவாக்கி நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதே எமது இலக்கு. இதைத்தான் 'தமிழீழம்' என்று ராஜபக்ஷ அணியினர் புலம்புகின்றனர். அரசியல் அரங்கில் தங்கள் பெயர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்கள் இவ்வாறு வதந்திக் கதைகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள். இதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் நாம் இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மை நிலைவரம் தெரியும்.

நாட்டு மக்களின் ஆணையை மீறி நாம் செயற்படமாட்டோம். பதவியில் நீடிப்பதற்காக இரத்தக் கரை படிந்தவர்களின் கைகளைப் பிடித்து வாக்களித்த மக்களுக்கு நாம் துரோகமிழைக்கவும் மாட்டோம்" - என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe