- ஊடகப் பிரிவு -
அட்டாளைச்சேனை நூலகத்தை புதிய கட்டடத்தில் ஆரம்பித்தல், தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு ஆகிய நிகழ்வுகள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாகவும் திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டிற்கு தேவையான இயந்திரங்களை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்து தர முடியுமெனவும், இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நாட்டின் சகல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து பரிசில்கள் வழங்கியதோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அத்தோடு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.