தென் இந்திய தமிழ் திரைத்துறையில் கால் பதிப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல அப்படியிருந்தும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் முதன் முதலாக நடித்த “நான்” என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுத விஜய் ஆண்டனி அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்தான் நமது பொத்துவில் அஸ்மின் அவர்கள்.
நான் படத்தில் புதிய பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க விஜய் ஆண்டனி அவர்கள் இணைய வாயிலாக நடாத்திய போட்டியில் அவரது மெட்டுக் கேற்ற பாடல் எழுதி வெற்றி பெற்று “நான்” திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்று தற்போது பல்வேறு தென் இந்திய திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக் கலக்கிக் கொண்டிருக்கின்றார் பொத்துவில் அஸ்மின் அவர்கள்.
இயக்குனர்,நடிகர் பாக்யராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு மூன்று தசாப்தங்களாய் வெளிவரும் தமிழகத்தின் பாக்யா வார இதழில் அஸ்மின் அவர்கள் தனது கலைப் பயணம் குறித்து வழங்கிய பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்திருக்கின்றார் இதோ அவரது பேட்டியின் முழு வடிவம்.
*கவிஞர் அஸ்மின்
இலங்கை.
*முகவரி தந்த பாடல்*- கவிஞர் அஸ்மின்
கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்றலே கவிபாடும் தென்கிழக்கு பிராந்தியத்தில் நாட்டார் பாடல்களின் விளை நிலங்களில் ஒன்றாக விளங்குகின்ற பொத்துவில்தான் நான் பிறந்த மண்.
கேட்டாலே கிறுகிறுக்க வைக்கும் நாட்டார் பாட்டாலே மகிமை பெற்ற எம்மண்ணின் மாந்தர்கள் இயல்பாகவே கவிமனம் படைத்தவர்கள். இதயம் மயங்க கவிபடைப்பவர்கள். எனது தந்தை வழி வந்த முன்னோர்கள் நாட்டுக்கவி பாடுவதில் வல்லவர்களாக திகழ்ந்துள்ளார்கள். எனது தந்தையின் பூர்வீகம் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் தேவிப்பட்டணம் என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் வணீகரீதியாக எனது முப்பாட்டன் இந்த பொத்துவில் பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.
எனது தந்தை உதுமாலெவ்வைதான் எனக்கு முதல் ஹீரோ. இயல்பாகவே கலையார்வம் மிக்க அப்பா வானொலி பிரியர், சிறந்த பத்திரிகை வாசிப்பாளர். உள்ளுர் செய்தி முதல் உலக செய்திவரை வரை உள்ளங்கையில் வைத்திருப்பார். அவரது சுவாரசிய பேச்சுக்காக அவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர் பேசும் போது இடைக்கிடை நாட்டார் பாடல்களும் ,பழமொழிகளும் தெறிக்கும் வாழ்வின் தத்துவங்களை இயல்பாகவே பேசுவார். எனது பள்ளிக்கூடம் முதலில் அப்பாவில் இருந்து தொடங்கியது..
நான் தாலாட்டோடு தமிழ்பாட்டும் கேட்டு வளர்ந்தவன். எங்கள் வீட்டில் முழுநேரமும் இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டே இருக்கும். எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் காலையில் கண்விழிக்கும் போது பாடல்களோடு தொடங்கும் என்பொழுது இரவு தூங்கும்போது பாடல்களோடுதான் அடங்கிப்போகும்.
அப்பா சிறுவயதில் இருந்தே என்னை பத்திரிகை வாசிக்க தூண்டினார். குழந்தை பருவத்தில் இருந்தே பத்திரிகை வாசிப்பின்மீதும் தமிழ்மீதும் காதல் எனக்குள் வந்துவிட்டது. எனது கை படாத நூல் எமது நூலகத்தில் இல்லையென்றே சொல்லுமளவுக்கு எமது ஊரின் நூலகத்தை நான் சிறப்பாக பயன்படுத்தியுள்ளேன்.கல்லூரி விடுமுறை நாட்களில் காலையில் வாசிகசாலை சென்று மாலையில் வீடு திரும்பிய சந்தர்ப்பங்கள் அதிகம். படிப்படியாக நல்ல நல்ல நூல்களால் எனது உலகத்தை நான் விரிவாக்கிக்கொண்டேன்.
1997 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்குபோதே கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பத்தாம் ஆண்டில் இலங்கை பத்திரிகைகளில் எனது கவிதைகள் வெளிவர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் காதல் கவிதைகள்தான் எழுதினேன் நான் வளர வளர எனது சிந்தனையாற்றலும் கவிதை பற்றிய பார்வையும் வேறுபட்டது.
நான் முதல் முதலாக எதுவும் புரியாத சிறுவயதில் நான் வாசித்த கவிதை நூல் எமது ஊரில் வெளிவந்த முதலாவது கவிதை நூல் *முச்சுடர்* என்பதாகும். அதில் உள்ள சந்தனம் மணக்கும் சந்தங்களோடு மயங்கவைக்கும் மரபுக்கவிதைகள் காணப்பட்டன. நான் மரபுக்கவிதைகள் எழுதுவதற்கு அந்த நூலும் காரணமாக அமைந்தன. நான் ஆரம்பத்தில் எழுதிய கவிதைகளில் அந்த நூலின் தாக்கம் இருந்தது. ஓசை நயத்துடன் நான் கவிதை எழுதுகின்ற கால கட்டத்தில் புதக்கவிதைக்காரர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். காலாவதியான கவிதைகளோடு கைகுலுக்கி கொள்வதாக ஏளனம் செய்தனர். நான் எதனையும் கண்டுகொள்ளாது யாப்பிலக்கணத்தை முறைப்படி கற்றுக்கொண்டேன். அதுதான் எனக்கு பிற்காலத்தில் நான் பாடல் எழுதுவதற்கு துணையாக நின்றது.
2001 ஆண்டு பொத்துவில் மத்திய கல்லூரியில் நான் உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் நான் பங்கு கொண்டு முதலாமிடம் பெற்று வெற்றியீட்டினேன். அதன் பரிசினையும் விருதினையும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் கரங்களால் பெற்றுக்கொண்டேன். அந்த நிகழ்வு எனது ஊரிலும் கல்லூரியிலும் எனக்கு மிகுந்த வரபேற்பை பெற்றுத்தந்தது.
அதன் பின்னர் நான் பங்கு கொண்ட அத்தனை போட்டிகளிலும் வெற்றி !வெற்றி! வெற்றிதான். தேசிய மட்ட கவிதைப்போட்டிகளில் முதலாமிடம் பெற்றமைக்காக பேராதனை பல்கலைகழத்தின் தங்கப்பதக்கம் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட தேசிய மட்ட போட்களில் வெற்றி கிட்டின.
2001 ஆண்டே எனது முதல் கவிதை நூல் 'விடைதேடும் வினாக்கள்' வெளிவந்தது. அந்த நூலினால் ஆகர்சிக்கப்பட்ட எமது ஊரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரூபாய் எம்.பி.ஏ அஸீஸ் அவர்கள்.50,000 பணத்தினை எது நூல் வெளியீட்டுக்காக ஒதுக்கினார். அவரது அனுசரணையில் வெளிவந்த எனது இரண்டாவது கவிதை நூல் 'விடியலின் ராகங்கள்' 2002 ஆம் ஆண்டு வெளிவந்து எமது மாவட்டத்திலும் இலங்கை கவிஞர்கள் மத்தியிலும் எனக்கு பரவாலான அறிமுகத்தை ஏற்படுத்தியது.
கல்லூரி முடித்து விட்டு 2003 ஆம் ஆண்டு ஊரில் உள்ள பாடசாலையில் ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தேன். அக்காலகட்டத்தில் என்னிடம் கற்ற மாணவர்களை எழுத்துறையில் பயிற்றுவித்தேன்.போட்டி நிகழ்ச்சிக்காக பாடல்களை எழுதிக்கொடுத்தேன்.
அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு என்னை வளப்படுத்திக்கொள்ள தலை நகர் கொழும்புக்கு பயணமானேன். சிங்களமொழி தெரியாததால் எனது படிப்புக்கேற்ற வேலை தேடுவது சிரமமாக இருந்தது. தலைநகரில் எனது ஆரம்ப நாட்கள் பசியிலும் கஷ்டத்திலும் கழிந்தன. கிடைக்கும் சிறு சிறு வேலைகளால் என்னை தற்காத்துக் கொண்டேன்.
2007 ஆண்டு பத்திரிகை துறையில் வேலை கிடைத்தது. ‘சுடர்ஒளி’ வார பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தேன்.அக்கால கட்டத்தில்தான் என்வாழ்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. சக்தி தொலைக்காட்சியினால் நடத்தபட்ட ‘இசை இளவரசர்கள்’ என்ற பாடல் போட்டி நிகழ்சியில் பங்கு பற்றினேன். ஆயிரக்கணக்கான போட்டியாளர்களுள் 16 இராகங்களுக்கு ஏற்ப நான்கு பேர் அடங்கிய 16 குழுக்கள் தெரிவாகினர். ஒரு குழுவில் பாடலாசிரியர் ,இசையமைப்பாளர் ,பாடகி, பாடகர் ,அடங்குவர். நானும் 16 பாடலாசிரியர்களுள் ஒருவாராக தெரிவானேன். அந்த போட்டியில் வெற்றி பெற்ற 64 போட்டியாளர்களுள் ஒருவனாக 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக சென்னை செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.அதுதான் எனது முதலாவது வெளிநாட்டு பயணம்.
சென்னை வந்து இயக்குனர்கள் ,இசையமைப்பாளர்கள் ,பாடலாசிரியர்களை சந்தித்து அவர்களின் திரை அனுபவங்களையும் பாடல் செய்யும் நுணுக்கங்களையும் கேட்டறிந்து இலங்கைக்கு வந்து சினிமா பாடல் பாணியில் பாடல் உருவாக்க வேண்டும். உருவாகும் 16 பாடல்களில் ரசிகர்களின் ஏகோபித்த விருப்பத்தை பெறும் பாடலை செய்த குழு இசை இளவரசர்களாக முடிசூடிக் கொள்வர்.
எமது பயணத்தில் இயக்குனர் *ஏ. வெங்கடேஷ்* ,இசையமைப்பாளர் *பரத்வாஜ்* பாடலாசிரியர்கள் *பா.விஜய்* ,*சினேகன்* ஆகியோரை எமது குழுவினர் சந்தித்தனர். நான் முதல் முதலாக சந்தித்த இயக்குனர் ஏ. வெங்கடேஷ் அவர்கள்தான். அவர் பாடல் எழுதுவதற்கான சூழலை விளக்கினார். இயக்குனரை சந்தித்து மூன்று மணிநேரங்களுள் 16 பாடலாசிரியர்ளையும் முந்திக்கொண்டு முழுப்பாடலையும் நான் எழுதிவிட்டேன். அதன் பின்னர் பாடலாசிரியர்கள் அனைவரும் வித்தக கவிஞர் பா.விஜய் அவர்களை சந்தித்து சினிமாவுக்கு பாடல் எழுதுவது பற்றி கலந்துரையாடுவதோடு எமக்கிருக்கும் சந்தேகங்களை கேட்டு தெளிந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பாடலாசிரியர்களும் ஒவ்வொரு கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனர். எனது சந்தர்ப்பம் வந்ததது.நான் எதுவும் கேட்கவில்லை. நான் சொன்னேன் *நான் இயக்குனர் வெங்கடேஷ் அவர்கள் சொன்ன கதைச் சூழலுக்கு பாடல் ஒன்றை எழுதியுள்ளேன் அதனை பாடிக்காட்டுகிறேன். பாடல் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை கூறுங்கள்* என்று கூறினேன்.அவர் பாட அனுமதித்தார். பாடலை முழுவதுமாக கேட்ட கவிஞரின் கருத்துக்காக ஒருவித படப்படப்போடு காத்திருந்தேன். என்னையும் ஏனைய பாடலாசிரியர்களையும் ஒரு சுற்று பார்த்த கவிஞர் பேசத் தொடங்கினார். ‘நீங்கள் கேட்ட அத்தனை கேள்விக்கான பதிலும் இப்பாடலில் இருக்கிறது அஸ்மின் தமிழ் சினிமாவுக்கு ஏற்ப பாடலை எழுதியுள்ளார். ஆனால் ஒரு குறை அழகான தமிழ் பாடலில் இடம்பெறும் *உன் டாவின்சி பார்வைகளால் நான் ஓவியமாகிவிட்டேன்* என்ற வரியில் வரும் ‘டாவின்சி’ என்ற ஆங்கில வார்த்தையை நீக்குங்கள் என்றார். போன உயிர் திரும்பி வந்தது போலிருந்துது. அந்த சூரிய வார்த்தை என்னை மலர வைத்தது.
அந்தப்பாடலை எமது குழு இசையமைப்பாளருக்கு காட்டியவுடன் அந்த பாட்டு சிறப்பாக இல்லையென்று நிராகரித்தார். அவர் போடும் மெட்டுக்கு புதிய பாடல் எழுத சொன்னார். அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் என்னையோ என்பாடலையோ அவர் பொருட்டாக நினைக்கவில்லை. அவர் போட்ட ஒன்பது மெட்டுக்களும் சக்தி தொலைக்காட்சியினரால் நிராகரிக்கபட்டன. அதனால் இசையமைப்பாளர் போட்டி நிகழ்ச்சியில் இருந்து தானாகவே விலகிக்கொண்டார். எமது குழுவில் மிஞ்சி இருந்த மூன்று பேரும் மீகாமன் இல்லாத வள்ளம்போல் நட்ட நடுக்கடலில் நின்று கொண்டிருந்தோம்.
ஒருவாராக எமது குழு பாடகியின் தந்தை போட்ட மெட்டுக்கு ஓடும் பஸ்ஸில் அவசர அவசரமாக பாடல் எழுதிக்கொடுத்தேன். நான் எதிர் பார்த்ததுபோல எமது குழு இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது. அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஒருவருட காலம் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் எனது தனித்தன்மைகளால் நான் இலங்கை முழுவதும் பிரபலமாகியிருந்தேன்.
அதன் பின்னர் டான் தொலைக்காட்சியில் எனது இலத்திரணியல் ஊடக பயணத்தை ஆரம்பித்து 2009 ஆம் ஆண்டு இலங்கை வசந்தம் தொலைக்காட்சில் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியில் இணைந்து இற்றைவரை பணிபுரிந்து வருகின்றேன்.
நான் வசந்தம் தொலைக்காட்சியில் தயாரிக்கும் ‘தூவானம்’ கலை -இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினை பெற்றுள்ளது. சக்தி தொலைக்காட்சி *இசை இளவரசர்கள்* நிகழ்ச்சியில் எனது குழு இசையமைப்பாளரால் நிராகரிக்கப்பட்ட எனது பாடல் இசை இளவரசர்கள் போட்டி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று இசை இளவரசராக முடிசூடிக்கொண்ட இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனால் இசையமைக்கபட்டு எனக்கும் இசையமைப்பாளருக்கும் இலங்கையில் மட்டுமல்லாது ஈழத்தமிழர்கள வாழும் புலம்பெயர்நாடுகளிலும் பெரும் பாராட்டை பெற்றுத்தந்தது. அந்தப்பாடல் தான் *எங்கோ பிறந்தவளே* ஆகும். அதன் பின்னர் இலங்கை அல்பங்கள் பலவற்றில் நான் பாடலாசிரியராக பணிபுரிந்தேன்.
2012 ஆண்டு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவர்கள் ஹீரோவாக அறிமுகமாகிய 'நான்' திரைப்படத்தில் ஒரு புதிய பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்தார். அவர் வழங்கிய கதை சூழல் மெட்டுக்கு ஏற்ப நானும் பாடல் எழுதி அனுப்பினேன். இருபதாயிரம் போட்டியாளர்களுள் முதலிடம் பெற்று வெற்றியீட்டியதால் எனக்கு ‘நான்’ திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
நான் எழுதிய ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்று சர்வதேச தமிழர்கள் மத்தியிலும் எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. எனது சினிமாவில் பாடல் எழுதும் கனவு நனவானது.எனது மூன்றாவது கவிதை நூலான *பாம்புகள் குளிக்கும் நதி*க்கு வாழ்த்துரை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அவரை சந்தித்த போது எனது பாடல் குறித்தும் ,சினிமா முயற்சி குறித்தும் உற்சாகப்படுத்தி வாழ்த்தினார்.
என்வாழ்வில் என்றுமே மறக்க முடியாத, மறக்கக்கூடாத மாமனிதர் திரு.*விஜய் ஆண்டனி* அவர்கள். ‘அமரகாவியம்’ திரைப்படத்தில் நான் எழுதிய 'தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே' பாடலுக்கு சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான *எடிசன் விருது* கிடைத்தபோது அந்த விருதினை அவருக்கே மேடையில் சமர்பணம் செய்தேன். இதுவரை நான் விஜய் ஆண்டனி, ஜிப்ரான் ,தாஜ்நூர், ஸ்ரீகாந்தேவா, வர்சன், அருணகிரி, சதீஸ், விக்ரம் செல்வா, பாலமுரளி ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில் திரைப்பாடல்களை எழுதியுள்ளேன்.
கடல் கடந்து நானிருப்பதால் பல வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவி போயிருக்கின்றன. இருந்தும் 15 திரைப்படங்களில் இதுவரை பணிபுரிந்துள்ளேன். அதில் நான்கு திரைப்படங்களுக்கு முழுப்பாடல்களையும் எழுதியுள்ளேன். பல படங்கள் 2019 இல் வெளிவர இருக்கின்றன. ஸ்ரீகாந்தேவா இசையில் வெளிவந்த *முத்து முத்து கருவாயா* சதீஸின் இசையில் *ஐசக் நியுட்டன் சைன்டிஸ் கண்ட ஆப்பிள் பெண்ணாய் ஆனத* ‘பாடல் இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'இதுகதையல்ல’ நிஜம் படத்தில் இடம்பெற்றுள்ள தாஜ்நூரின் ‘ஏ சண்டாளனே’ பாடல் ஆகியன ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தால் போல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு நான் எழுதி வர்சன் இசையமைத்து பாடிய *வானே இடிந்ததம்மா வாழ்வே முடிந்ததம்மா* பாடல் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகத்தமிழர்களையும் உருகவைத்து அவர்தம் உள்ளத்தில் நிரந்தரமாக உட்கார்ந்து இருக்கிறது. இப்பாடல் அம்மாவின் சமாதியில் 2 மாதங்கள் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக ஒலித்தது. அந்த பாடலை எழுதியமைக்காக போயஸ்கார்டன் அழைக்கப்பட்டு நான் பாராட்டப்பட்டேன். அந்தவகையில் நான் தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடலும், அம்மா இரங்கல் பாடலும் எனக்கு முகவரி தந்த பாடல்களாகும்.
இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும் எனது கனவாகும். எனது கனவு நனவாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு அந்த மறக்க முடியாத தருணத்துக்காக நான் காத்து நிற்கின்றேன். எனது உணர்வுகளை உலகமெங்கும் வெளிச்சமிட்டு காட்டும் பாக்கியா இதழுக்கும் இதன் ஆசிரியர் மற்றும் இனிய நண்பர் எழுத்தாளர் மணவை பொன்மாணிக்கம் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.