(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவு கடற்கரைவீதியிலுள்ள உப பொலிஸ் நிலையம் நள்ளிரவில் பொதுமக்களின் முற்றுகைக்கு உள்ளானது.
இச்சம்பவம் நேற்று(12) நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்றது.
நள்ளிரவுவேளையில் நடுஊருக்குள் இனந்தெரியாத மர்ம நபரொருவர் பொலிஸ் நிலையத்திற்கு அண்டியுள்ள பிரதேசத்திலுள்ள வீதிமின்விளக்குகளை அணைத்துவிட்டு வீடுவீடாகப் பாயந்துசென்றிருக்கிறார். இதனை தற்செயலாகக்கண்ட ஒருபொதுமகன் கத்திச்சத்தம்போட்டதும் மக்கள் சேர்ந்து அவரைத்துரத்தினர்.
விடயமறிந்ததும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் அங்கு விரைந்துசென்று பொலிசாருடன் பேசினார்.
பொலிசார் குறித்த மர்மநபரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் தவிசாளருக்கும் உபபொலிஸ்நிலைய பொலிஸ்பொறுப்பதிகாரிக்குமிடையே வாக்கவாமேற்பட்டது. ஜனாதிபதியென்றாலும் சந்தேகநபரொருவரை பார்க்கஅனுமதிக்கமுடியாது என்று பொலிஸ் அலுவலர் பதிலளித்தார்.
உடனே தவிசாளர் சம்மாந்துறை பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரிக்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு அவசரநிலைபற்றிவிளக்கினார். காரைதீவு கடற்கரைவீதியிலுள்ள உப பொலிஸ் நிலையம் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின்கீழ் தற்காலிகமாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தையறிந்ததும் சம்மாந்துறையிலிருந்து பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இப்னு அசார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்தார்.
இருவரும் அங்கு மக்களுடன் அரைமணிநேரம் கலந்துரையாடியதன் பலனாக நிலைமை சுமுகமானது.
எனினும் தவிசாளரும் மக்களும் இணைந்து குறித்த உபபொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றவேண்டும் என பொலிஸ்பொறுப்பதிகாரியிடம் வேண்டுகோள்விடுத்தனர். குறித்த சந்தேகநபருக்கு அடைக்கலம்கொடுத்துக் காப்பாற்றியமை தொடர்பில் மக்கள் கடுப்பாகினர்.
இருந்தபோதிலும் குறித்த சந்தேகநபரை நள்ளிரவே விலங்கிட்டு பொலிசார் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இன்று (13)வியாழக்கிழமை பகல் அவரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி இப்னு அசார் தெரிவித்தார்.
குறித்த நபர் நற்பிட்டிமுனையைச்சேர்ந்தவரென்றும் அவர் சம்மாந்துறையில் மணம்முடித்தவரென்றும் நள்ளிரவில் நடுஊருக்குள் வந்ததன் மர்மம் என்னவென்று தெரியவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.