சம்மாந்துறை சமூக நல மேன்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணத் தேவையுடைய 140 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும், அண்மையில் வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகளில் அதி கூடிய சித்திகளைப் பெற்று சம்மாந்துறைக்குப் பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வும் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய அல்-ஹாஜ் எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தையும் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும் பெற்று சம்மாந்துறைக்குப் பெருமை சேர்த்த சம்மாந்துறை மத்திய மஹா வித்தியாலய மாணவன் மொஹிடீன் பாவா ரிசா முஹம்மட் அவர்களுக்கும் மற்றும் பௌதீக விஞ்ஞான துறையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை அடைந்த சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியால மாணவன் முஹம்மட் சலீம் ஹினாஸ் அவர்களுக்கும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய அல்-ஹாஜ் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களினாலும், சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்சூரா தலைவரும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமாகிய அஷ்சேக் எம்.ஐ.அமீர் அவர்களினாலும் பொண்ணாடி போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான ஏனைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களோடு ஏனைய அதிதிகளாக சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்சூரா தலைவரும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமாகிய அஷ்சேக் எம்.ஐ.அமீர் அவர்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹமட் ஹனீபா அவர்களும், பிரதம நம்பிக்கையாளர் அல்-ஹாஜ் கே.எம். முஸ்தபா (ஜே.பி.) அவர்களும், சம்மாந்துறைப் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களும், சம்மாந்துறை மத்திய மஹா வித்தியாலய பாடசாலை அதிபர் ஏ.சி.ஏ. முஹம்மட் இஸ்மாயில் அவர்களும், சம்மாந்துறை செந்நெல் ஷாஹிரா பாடசாலை அதிபர் எம்.ஐ. மீரா முகைடீன் அவர்களும், சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர்களாக திருமதி சியாமா அவர்களும் மற்றும் திரு. கௌரவ சஹீல் அவர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.