ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு
கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் உடனடியாக இந்த நிதியை நிறுத்தி இந்த நிதியை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து கிழக்கு மாகாணத்திலே ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு , ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் கொடுப்பணவு வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
அத்தோடு பல்வேறுபட்ட பிரதேசங்களில் ஐந்தாம் ஆண்டுவரை படிக்கின்ற மாணவர்கள் இவ்வாறான எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில் இவ்வாறு சிறு தொழில்கள் செய்வதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து கிழக்கு மாகாண பாடசலைகளில் ஐந்தாம் ஆண்டுவரை கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா 500 ரூபா வீதம் உடன் வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தந்தையை இழந்த மாணவர்களுடைய பெயரில் வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் குறிப்பிட்ட மாணவர்களின் வங்கிகணக்கிற்கு அந்த நிதி வைப்பிலிடப்படும் அவர்கள் அந்த நிதியை பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்குரிய திட்டத்தை ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் நடைமுறைபடுத்தவுள்ளார். இந்த முயற்சியை ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் முதன்முதலாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.