காரைதீவு சகா.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது வேளாண்மை அறுவடைக்காலம் நடந்து கொண்டிருக்கின்றது விவசாயிகளிடமிருந்து நெல்லைக் குறைந்த விலையில் மொத்த வியாபாரிகளும் அரிசி ஆலை உரிமையாளர்களும் கொள்வனவு செய்து விலை உயர்ந்த பின் அதனை விற்பதற்கான திட்டங்களை வகுத்திருப்பதாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். நெல்லின் விலை குறைவடைந்த நிலையிலும் அரிசியின் விலை உச்சமடைந்துள்ளதாக விவசாயிகள் மேலும் கூறுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதினால் இதில் ஏழை விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் கொள்வனவுக்கு அரசாங்கத்தினால் ஆயிரத்து 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எஸ். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயத்தினை நம்பி தனது வாழ்வைக் கழிக்கும் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து உண்ணும் நெல் வியாபாரிகள் இது பற்றி சிந்திக்க வேண்டும், விவசாயிகளின் நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்ய வேண்டும்.