மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
வெளிநாட்டவர்கள் அதிகமாக வேலை செய்யும் வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா முதன்மை வகிக்கின்றது சவுதி அரேபியாவில் சுமார் 10 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணி புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது இவர்களில் அதிகமானோர் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ், எகிப்து, நேபாளம், சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
நீங்கள் சவுதி அரேபியாவிலிருந்து உங்கள் சொந்த நாடுகளுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம் இவ்வளவுதான் அனுப்ப வேண்டும் என்ற எந்த வரைமுறையும், கட்டுப்பாடும் கிடையாது ஆனால் நீங்கள் அனுப்பும் பணம் சட்டரீதியாக சம்பாதித்த, உங்கள் தொழிலுக்கு ஏற்ற ஊதியத்தைக் கொண்ட தொகையாக இருக்க வேண்டும் அதுதான் மிக மிக முக்கியம்.
உதாரணமாக...ஒருவர் சாரதியாக பணிபுரிகின்றார் அவரது மாதாந்த சம்பளம் 2000 சவுதி றியால்கள் என வைத்துக் கொள்வோம் ஆனால் மாத இறுதியில் அவர் தனது வீட்டுக்கு பணம் அனுப்பும் போது 10 ஆயிரம் றியால்கள் அனுப்ப முடியாது அப்படி அனுப்பும் போது அவர் அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார் சம்பளத்தைத் தாண்டிய பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
சவுதியில் பல வெளிநாட்டவர்கள் சொந்தமாக தொழில் செய்கிறார்கள், கடைகள் வைத்திருக்கின்றார்கள், ஹோட்டல்கள் வைத்துள்ளார்கள் இவர்கள் இங்கே தங்கள் தொழில்கள் ஊடாக ஈட்டும் இலட்சங்களைக் கூட தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து தங்கள் சொந்த நாட்டு வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம்.
பணம் அனுப்பும் விடையத்தில் இன்னுமொன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் அதாவது....சவுதி அரேயாவில் பணிபுரியும் ஒரு சாரதி தனது 2000 றியால் சம்பளத்தை தனது வங்கிக் கணக்கு ஊடாக தனது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார் அதே போல் தனது நண்பர் ஒருவரது பணத்தை நண்பருக்கு வங்கிக்கு செல்ல நேரமின்மையால் உதவி என்ற அடிப்படையில் தனது வங்கிக் கணக்கு ஊடாக நண்பரது வீட்டுக்கு பணம் அனுப்புகிறார் என்றால் இது தண்டனைக்குரிய குற்றமாகும் இது விடையத்தில் இங்கு பணிபுரிபவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.
அதே போல் சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் சிலர் உண்டியல் முறை மூலமாகவும் பணம் அனுப்புவதுண்டு அதாவது உங்களது வீட்டுக்கு நீங்கள் 1 இலட்சம் ரூபாய் இலங்கைப் பணம் அனுப்ப வேண்டும் என்றால் உண்டியல் முறையினை நடாத்துபவர்களிடம் நீங்கள் சவுதியில் வைத்தே 1 இலட்சம் ரூபாய்க்கான றியால் தொகையினை கொடுக்க வேண்டும் அவர் அதற்கான பெறுமதியான 1 இலட்சம் ரூபாவினை இலங்கையில் உள்ள அவரது நபர் மூலமாக உங்களது வங்கிக் கணக்கிக்கு அனுப்பி வைப்பார்.
சவுதி அரேபியாவில் இம் முறையில் பணம் அனுப்புவதும் சட்ட விரோதமாகவே கருதப்படுகின்றது.