Ads Area

சம்மாந்துறையில் அதிக விபத்துக்கள் நிகழும் வீதிகளுக்கு வேகத் தடைகளை அமைக்க வேண்டும்.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் வீதி விபத்துக்களே அதிகமாக காணப்படுவதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வீதி விபத்துக்களின் மூலம் நாளாந்தம் சராசரியாக 8.7 பேர் மரணிக்கின்றனர். 8 பேர் படுகாயமடைகின்றனர். நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்களைவிட அதிகமானவர்களை பலியெடுப்பது வீதி விபத்து என்றால் மிகையில்லை. அதாவது சுமார் மூன்று மணித்திலாலத்திற்கு ஒரு வீதி விபத்து ஏற்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றன.

சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு ஒரு வீதி விபத்தினூடாக ஒருவர் மரணமடைவதாகவும், இருவர் படுகாயமடைவதாகவும், இந்த வீதி விபத்துக்கள் மூலம் நாளாந்தம் ஏதோவொரு வகையில் அகால மரணங்கள் நடக்கின்றன. வீதி விபத்துகளால் இழக்கும் உயிர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. வீதி விபத்துக்களின் மூலம் மரணிப்பவர்களினது எண்ணிக்கையும், படுகாயமடைபவர்களின் எண்ணிக்கையும் அங்கவீனமானவர்களின் எண்ணிக்கையும் வருடாந்தம் அதிகரித்தே வருகிறது.

இலங்கையில் பரவலாக ஏற்படும் வீதி விபத்துக்கள் சம்பந்தமான புள்ளி விபரங்களே மேலே கூறப்பட்டவைகளாகும். 

இலங்கையில் உள்ள பெரு நகர வீதிகளில் ஏற்படும் விபத்துக்கள் சாரதியின் துாக்கம், களைப்பு, போதைப் பாவனை, அதிகரித்த வேகம், வீதி ஒழுங்கை பேணாமை, முந்திச் செல்ல முற்படுதல், தொலைபேசிப் பாவனை போன்றவற்றினால்தான் அதிகமாக ஏற்படுகிறதென்றால் சம்மாந்துறையில் அதிகரித்த நிதானமற்ற வேகத்தினாலும், வீதி ஒழுங்கை போணாத ஓட்டங்களினாலுமே அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றது.

நாட்டில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருது போல் சம்மாந்துறையிலும் தற்போது அதிகரித்த வீதி விபத்துக்கள் பற்றிய செய்திகளே வெளி வந்த வண்ணமுள்ளன. சம்மாந்துறையில் ஏற்படும் அதிக விபத்துக்கள் மோட்டார் சைக்களில்கள் மூலமாகவும் முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ) மூலமாகவுமே அதிகம் ஏற்படுகின்றது.

சம்மாந்துறையில் தற்போது பெரும்பாலான வீதிகள் தார் மற்றும் கொங்ரீட் போடப்பட்டு சீர்படுத்தப்பட்டுள்ளதனால் அதனுாடாக மோட்டார் வாகணங்களையும், முச்சக்கர வண்டிகளையும் ஓட்டிச் செல்வோர் மின்னல் வேகத்தில் செல்லக் கூடியதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்லும் போது தனது உயிரைப் பற்றியோ அடுத்தவர்களின் உயிரைப் பற்றியோ எந்த வித அக்கறையும் இன்றி மிக மிக வேகமாக ஓட்டிச் செல்கின்றார்கள்.

நாம் வீதியில் இறங்கி வீடு திரும்பும் வரையில் உயிருக்கு உத்தரவாதமில்லாத அளவுக்கு சம்மாந்துறையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. வீதிகளில் மோட்டார் வாகனங்களை மற்றும் ஆட்டோக்களை செலுத்துவோர் வேகமாக வானத்தை செலுத்த முற்படுதல், இளம் வயதில் சாரதி அனுமதி பத்திரம் பெற்ற இளைஞர்கள் மிக துடிப்புடன் வாகனத்தை செலுத்துவதும், வீதி ஒழுங்குகளை பின்பற்றாது வாகனத்தைச் செலுத்துதல் போன்றவற்றினால் சம்மாந்துறையில் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

சில இளைஞர்கள் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளும் வயதைக் கூட எட்டியிருக்க மாட்டார்கள் அவர்கள் வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களை பெற்றோரின் அனுமதியோடு அல்லது அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து வந்து உற்சாகக் களிப்பில் மிக வேகமாக ஓட்டி இறுதியில் விபத்துக்கள் சம்பவித்து உயிர்ச்தேசம் ஏற்பட்ட சம்பவங்களும் சம்மாந்துறையில் நிகழாமல் இல்லை.

இன்னும் சில இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அதிக பட்சமாக இரண்டு பேர் பயணிக்கலாம் என்றால் இவர்கள் 4 பேர் 5 பேர் என ஏற்றிக் கொண்டு அதிலும் கூட மின்னல் வேகத்தில் சென்று விபத்துக்களை சம்பவித்து தங்களது உயிர்களை மட்டுமல்லாது கூட ஏற்றி வந்த நண்பர்களது உயிர்களையும் பறி கொடுத்த சம்பங்களும் சம்மாந்துறையில் நிகழாது இல்லை.

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தி பிரதான வீதி (காரைதீவு-அம்பாறை-கல்முனை) சம்மாந்துறை பௌஸ் மாவத்தை வீதி, சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வீதி, சம்மாந்துறை அலிவன்னியார் வீதி, சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதி, சம்மாந்துறை பொலிஸ் வீதி போன்ற பிரதான வீதிகளோடு ஏனைய குறுக்கு வீதிகளிலும் அதிகரித்த விபத்துக்கள் சம்பவித்துக் கொண்டேயிருக்கின்றன.

மேலும் சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலய கடவை, சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர்க் கல்லுாரிக் கடவை, தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய கடவை, சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயக் கடவை, அரபா வித்தியாலய கடவை, ஜமாலியா வித்தியாலய கடவை, வீரமுனைப் பாடசாலைக் கடவை, சாஹிராப் பாடசாலைக் கடவை போன்ற பாடசாலைக் கடவைகளிலும் அதிக விபத்துக்கள் சம்பவிக்கின்றன. பாடசாலைக் கடவைகளில் குறிப்பாக மாணவர்களே அதிக விபத்துக்களுக்கு உள்ளாகின்றார்கள்.

மோட்டார் சைக்கிளை மற்றும் முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் செல்வோர்களின் கவனயீனத்தால் விபத்துக்கள் ஏற்படுகின்றது என்றால் வீதிப் போக்குவரத்தை கவனத்தில் கொள்ளாத பாதசாரிகளாலும் விபத்துக்கள் அதிகம் நிகழ்ந்து அவர்களும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றார்கள் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வீதியால் நடந்து செல்லும் பெண்கள், வயயோதிபர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள், துவிச்சக்கர வண்டிகளை ஓட்டிச் செல்வோர், தொழுகைகக்கா பள்ளிவாசலுக்கு நுழைய வீதியை கடப்போர், கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீதியைக் கடப்போர் போன்ற பாதசாரிகளின் கவனயீனத்தாலும் சம்மாந்துறையில் விபத்துக்கள் நிகழாமலில்லை.

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் தரித்து நின்று கண்கானிக்கும் வீதிப் போக்குவரத்துப் பொலிசார் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளையும், தண்டப் பணங்களையும் ஏற்படுத்தினாலும், எவ்வளவுதான் சட்டதிட்டங்களை அமுல்ப்படுத்தினால் சம்மாந்துறையில் விபத்துக்கள் குறைந்தபாடில்லை.

மேற் கூறப்பட்ட சம்மாந்துறையில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் அதிக விபத்துக்கள் சம்பவிக்கின்ற வீதிகள் என அனைத்து வீதிகளிலும் வேகத் தடைகளை நிச்சயம் ஏற்படுத்த வேண்டும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மாந்துறையில் உள்ள எந்த வீதியிலும் நீண்ட காலமாக வேகத்தடைகள் ஏற்படுத்தப்படவே இல்லை. ஊரில் நிகழும் விபத்துக்களை பார்த்தாவது வேகத் தடைகளின் அவசியத்தை உணர்ந்து அதனை உடனடியாக ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும், மக்களும் அதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் இதன் மூலமாகவாவது ஊரில் நிகழும் விபத்துக்களில் பாதியைக் குறைத்து விடலாம்.

வீதியில் வாகனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு சாரதியும் நிதானத்துடனும், ஏனைய வாகனங்களுக்கு இடங்கொடுத்தும், வீதி ஒழுங்கை சரிவர கடைப்பிடிக்கும் போதும் மாத்திரம்தான் ஊரில் நிகழும் இந்த வீதி விபத்துக்களை தவிர்க்கலாம். அதேநேரத்தில் வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகளும் வீதிகளில் செல்லும் கட்டாக்காலிகளைப் போல் செல்லாது வீதி ஒழுங்குகளை கைக்கொள்ள வேண்டும். நடுவீதிகளில் வாகனங்களுக்கு குறுக்காக வீதிகளை நடக்காமல், வீதி கடவைகளில் வீதிகளை கடந்தால் வீதி விபத்துக்களை தவிர்க்கலாம். ஒவ்வொரு உயிருக்கும் பெறுமதியுண்டு என்பதை தெரிந்துணர வேண்டும்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe