காரைதீவு நிருபர் சகா.
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் வரட்சியால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது.
குடிநீர்ப்பிரச்சினை ஒருபுறம் தமது பிரதான தொழிலான விவசாயத்தை கைவிடும்நிலை மறுபுறம். இத்தனைக்கு மத்தியில் மக்கள் பயபீதியுடன் காலத்தைக்கடத்துகின்றனர். வரட்சியாலும் வெப்பத்தாலும் மக்கள் பலவழிகளாலும் பாதிப்புகளை எதிர்நோக்கிவருகிறார்கள். மக்கள் காய்ச்சல் தடிமன் சளி சளிச்சுரம் ரொன்சில் தலைச்சுற்று போன்ற பல நோய்களாலும் பீடிக்கப்பட்டுவருகிறார்கள்.
அனர்த்தமுகாமைத்துப்பிரிவின் அறிக்கை!
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்துறை பணிப்பாளர் சியாட்டிடம் கேட்டபோது மாவட்டத்தில் வரட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான தகவல் பிரதேசசெயலாளர்களிடமிருந்து கிடைத்துவருகிறது.
சேனநாயக்கசமுத்திரத்தின் நிலை!
அம்பாறை மாவட்ட விவசாயத்திற்கு நீரை வழங்கும் பிரதான நீர்வழங்கு மையமாகத்திகழும் சேனநாயக்கசமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாகக்குறைந்துள்ளது.
மொத்தமாக 7லட்சத்து 70ஆயிரம் ஏக்கர்அடி நீர் கொள்ளளவு கொண்டது இச்சமுத்திரம். ஆனால் அம்மட்டம் இன்று 03லட்சத்து 100ஆயிரம் ஏக்கர் அடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநீர் குறைந்த வேளாண்மைச்செய்கைக்காகவும் குடிநீருக்காகவும் மீன்வளர்ப்பிற்காகவும் மாத்திரமே போதுமானதாகும்.
சிறுபோக நெற்செய்கை !
தற்போது சிறுபோக நெற்செய்கை இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஏலவே சிறுபோகசெய்கைக்கு சுமார் 75ஆயிரம் ஹெக்டேயர் நிலத்திற்கு அனுமதிவழங்கப்பட்டிருந்தது. முழுமையாக சிறுபோகம் செய்வதற்கு 04லட்சத்து 60ஆயிரம் ஏக்கர் அடி தண்ணீர் தேவை.ஆனால் தற்போது 03லட்சத்து 100ஆயிரம் ஏக்கர் அடியாகக்குறைந்துள்ளது. இதனால் சிறுபோக செய்கை 25வீத்த்தால் குறைக்கப்பட்டுள்ளது.
வரட்சிதொடர்ந்தால் நீர் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் சாத்தியமுள்ளது. இன்றைய வரட்சிநிலை நீடித்தால் சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதிவழங்கமுடியாத துர்ப்பாக்கியநிலைதோன்றும் என நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதன்படி பார்த்தால் சிறுபோக நெற்செய்கை அறவே செய்யமுடியாத நிலைதோன்றும். இது நாட்டின் மொத்த தேசிய நெல்உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியைக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் மாவட்ட விவசாயிகளின் ஜீவனோபாயத்திற்கு பாரிய சவாலாகவும் மாறும்.
வழமையாக மாவட்டத்தின் சிறுபோக நெற்செய்கைக்காக 1லட்சத்து 20ஆயிரம் ஏக்கர் காணி பயன்படுத்துப்படுவது தெரிந்ததே. ஆனால் நீர்மட்டம் குறைந்திருந்த காரணத்தினால் இம்முறை சிறுபோகத்திற்கு ஆக 75ஆயிரம் ஹெக்டேயர்; காணிக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.
. ஆனால் சேனநாயக்க சமுத்தரத்தின் நீர்மட்டம் உயராதவரையில் அதாவது மழை பொழியாதவரை சிறுபோக நெற்செய்கையை பூரணமாக மேற்கொள்ளமுடியாத மிகவும் அபாயகரமான சூழல் தோன்றும். இது பல்வேறு கோணங்களில் தாக்கத்தைச் செலுத்தும் என பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் மழை பொழியும் என மனிதர்கள் நம்புகின்றனர். இறைவன் கைவிடமாட்டான் என்றும் நம்புகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
வழமையாக மாவட்டத்தில் பெரும்போகத்தின்போது 1லட்சத்து 50ஆயிரம் ஏக்கர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவது தெரிந்ததே.