இன்றைய தினம் 21.04.2019 நாட்டில் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. கிறிஸ்தவ சகோதரர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான இன்று அவர்களது மதஸ்தலங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டிருப்பதானது எந்தவிதத்திலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.
இத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறும், குறிப்பாக வைத்திய சாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதால் தேவையான இடங்களுக்கு இரத்தத்தை தானமாக வழங்க முன்வருமாறும் அனைவரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
அனைத்து மத, சிவில் தலைவர்களும் ஒன்றிணைந்து தத்தம் பிரதேச மக்களை சரியாக வழிநடாத்துவதினூடாக சமூகங்களுக்கிடையிலான இன வாதப் பிரச்சினைகளில் இருந்து எமது நாட்டு மக்களை பாதுகாக்க முன்வருமாறும், சமூக ஊடகங்களில் வலம் வருகின்ற வதந்திகளை பரப்புவதிலிருந்து சகலரும் தவிர்ந்து நடக்குமாறும் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.
அதே நேரம் அரசாங்கமும் பாதுகாப்புத்துறையும் நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் வேண்டிக் கொள்கின்றது.
முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
கௌரவத் தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

