காலங்கள் பல மாறினாலும் சில பாரம்பரிய விஷயங்கள் என்னமோ நம்மை பின்னி பிணைத்து வைக்க தான் செய்கிறது. நமது முன்னோர்கள் காட்டிய சில வழிமுறைகள் நமது வாழ்க்கைக்கு மிக முக்கிய பங்காக இருந்து வருகிறது. சிலருக்கு முன்னோர்களின் வழிகள் மூடத்தனமாக தோணலாம்; சிலருக்கு மிக பெரிய அறிவியல் வளர்ச்சியாக இருக்கலாம். உண்மையில் சில விஷயங்கள் மூடத்தனமாகவும், சில விஷயங்கள் அறிவியல் பூர்வமாகவும் உள்ளது என்பது தான் நிதர்சனம். அப்படிப்பட்ட ஒன்று தான் நமது முன்னோர்களின் சமையல் முறையும்.
ஆரோக்கிய சமையல்
மண் பாத்திர சமையல் என்றால் பலருக்கும் "பரவை முனியம்மா" பாட்டி தான் நியாபகத்துக்கு வருவாங்க. கிராமத்து சமையல், ஆரோக்கிய சமையல் போன்ற பெயர்களில் சமையல் நிகழ்ச்சியை நடத்தி வந்தாங்க. பரவை முனியம்மா பாட்டி சொன்னது போலவே இந்த மண் பாத்திரத்துல சமைச்சா எக்கசக்க நன்மைகள் இருக்குதுனு தற்போதைய அறிவியல் சொல்லுது.
ஆயுர்வேதம்
செரிமான பிரச்சினை
மண் பாத்திரத்தில் சமைப்பதால் உணவில் உள்ள அமில தன்மை மற்றும் காரிய தன்மை ஆகிய இரண்டையும் சமமாக மாற்றி விடுகிறது. இதற்கு காரணம் பூமியில் இருந்து எடுக்கப்படும் மண்ணால், இது தயார் செய்வதாலே. ஆதலால், இவை செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
ஊட்டச்சத்துக்கள்
பல்வேறு ஊட்டசத்துக்கள் இந்த மண் பாத்திர சமையலில் ஒளித்துள்ளன. குறிப்பாக இரும்புசத்து, கால்சியம், சல்பர், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. சமைக்கும் போது உணவில் இருக்க கூடிய சத்துக்களும் குறையாமல் நேரடியாக நமக்கு கிடைக்கும் படி இது காத்து கொள்ளும்.
குறைந்த எண்ணெய்
மண் பாத்திரத்தில் சமையல் செய்வதால் பெரிய அளவில் எண்ணெய் உபயோகப்படுத்த வேண்டியதில்லை. பொதுவாக உணவு பொருட்களில் உள்ள இயற்கை எண்ணெய்களை வீணாக்காமல் அப்படியே பாதுகாக்கும். எனவே, கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
சுவை
இன்று நாம் பயன்படுத்தும் ஸ்டீல், அலுமினியம் போன்றவற்றில் சமைத்தால் உணவின் சுவை குறைந்து விடுவது இயல்பு. ஆனால், மண் பாத்திரத்தில் சமைத்தால் உணவின் சுவை கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருக்கும். அத்துடன் உணவின் ருசியும் பல மடங்கு கூடி விடும்.
வெப்பம்
மண் பாத்திரத்தில் சமைத்த உணவுகள் நீண்ட நேரம் வெப்பத்தை தாங்கும். அதே போன்று உணவு கருகாமல் பார்த்து கொள்ள மண் பாத்திரம் சிறந்த தேர்வு. மிக முக்கியமானது இதில் சூடு செய்யும் போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்குமாம்.
எச்சரிக்கை!
பல இடங்களில் மண் பாத்திரம் என்கிற பெயரில் செராமிக் போன்றவற்றை பூசி விற்கின்றனர். இந்த வகை செராமிக் பாத்திரங்கள் பல வகையான ஆபத்துகளை உடலுக்கு ஏற்படுத்தும். கிட்டத்தட்ட இது விஷத்துக்கு சமமானது என ஆய்வுகள் சொல்கின்றன. ஆதலால், மண் பாத்திரங்களை வாங்கும் போது செராமிக் கோட் இல்லாததாக பார்த்து வாங்குங்கள்.
மாற்று
என்ன தான் கால மாற்றம் அடைந்தாலும் ஒரு சில விஷயங்கள் மாறாமல் அப்படியே இருப்பது நல்லது தான். அந்த வகையில் மண் பாத்திர சமையலை கூறலாம். பல விதங்களிலும் இதனால் நன்மையே தவிர, எந்த பாதிப்பும் இல்லை. ஆதலால், இது போன்ற உணவு முறையை நாம் மீண்டும் கொண்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நீண்ட ஆயுளுடன் வாழலாம்.