சாய்ந்தமருது மற்றும் கல்முனையின் ஏனைய பிரதேசங்களுக்கான உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பில் தீர்வை எட்டுவது சம்பந்தமாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2019.02.26ம் திகதி உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது அறிந்த விடயமே.
இந்த உயர்மட்ட குழுக் கூட்டத்தினடிப்படையில் கல்முனை மாநகர சபையின் கீழுள்ள சாய்ந்தமருது மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும் அறிய முடிந்தது. கூட்டம் நடைபெற்று ஒன்ரறை மாதங்கள் கடந்த நிலையில் இந்த குழுவானது எத்தனை தடவைகள் கூடி இது தொடர்பில் ஆராய்ந்துள்ளது என்பது புதிராக உள்ளது.
ஆனால் சாய்ந்தமருது தரப்பிடம் இது குறித்து பேச வேண்டிய எந்த தேவையும் இல்லை. காரணம் சாய்ந்தமருதுக்கு எவ்வித எல்லைப் பிரச்சினைகளும் இல்லை என்பதுடன் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாகப் பிரகடணப்படுத்தப்பட்ட பிரதேச செயலகம் உள்ளது. பேச வேண்டியதாயின் எல்லைப் பிரச்சினை உட்பட வேறு நிருவாக ரீதியான குறைபாடுகள் உள்வர்களே பேச வேண்டும். இதில் சாய்ந்தமருது தரப்பு பார்வையாளராக கூட கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
இவற்றை வைத்துப் பார்க்கும்போதே உயர்மட்ட கலந்துரையாடல் எனும் பெயரில் சந்திப்புக்கள் நடப்பதும் குழு அமைப்பதும் வெறும் ஏமாற்று வேலைகளே என நிருபணமாகின்றது.
எம்.ஐ.சர்ஜுன்
சாய்ந்தமருது

