ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம். ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள். வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.
அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

